'யாரும் உள்ள வராதீங்க... வெளிய போங்க!'... வெளிநாட்டினருக்கு தடை விதித்து... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சீனா!... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்கிய வுகானில் புதிதாக கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லாத நிலையில், வெளிநாட்டு பயணிகள் சீனாவுக்குள் நுழைய சீன அரசு தடை விதித்துள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் சீனாவை விட அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளன. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. முதன் முதலாக கொரோனாவின் தாக்குதலுக்குள்ளான சீனா தற்போது மெல்ல தேறிவருகிறது.
இந்நிலையில், வெளி நாட்டிலிருந்து வருபவர்கள் மூலம் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடித்ததையடுத்து, ஒட்டுமொத்தமாக வெளிநாட்டினர் வருகைக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் உருவான வுகான் நகரில் நேற்று புதிதாக ஒருவர்கூட கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை. ஆனால், வுகான் நகரம் அமைந்திருக்கும் ஹூபே மாகாணத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "புதிதாக 55 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதில், 54 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் மட்டும் உள்நாட்டவர்.
வெளிநாடுகளில் ஏராளமான சீனர்கள் வசித்து வருவதால், அவர்கள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக மாணவர்கள் அதிகமாக வருகிறார்கள். அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் சீனாவுக்குள் வெளிநாட்டு விமானங்கள் நுழைய 75 சதவீதம் தடை விதிக்கப்பட்டு, வெளிநாட்டினர் முற்றிலுமாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் விமானத்துக்கு தடையில்லை.
சீனர்கள் அல்லாதவர்கள் சீனாவில் வசித்து தற்போது அவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்கள் மீ்ண்டும் சீனாவுக்குள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதி்க்கப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவிய எண்ணிக்கை மட்டும் 595 ஆக அதிகரித்துள்ளது.
பெய்ஜிங் நோக்கி வரும் அனைத்து விமானங்களும் புறநகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டு அங்கு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பெய்ஜிங், ஷாங்காய் நகருக்குள் புதிதாக யார் நுழைந்தாலும் 14 நாட்கள் சுயதனிமைக்குச் செல்ல வேண்டும்.
சீனாவில் 81,340 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 74,588 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 537 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் 3,460 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள், ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், 3,292 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
