சாப்பாடு இல்லாம எப்படி சார் உயிர் வாழ முடியும்...? 'நாங்க ஊருக்கு போகணும்...' கேரளாவில் மாட்டிக்கொண்ட கட்டிட தொழிலாளர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 26, 2020 06:50 PM

தமிழகத்தை சேர்ந்த 30 கட்டிட தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கேரள மாநிலத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் அவர்கள் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

It is reported that 30 building workers are trapped in Kerala

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் விகிதத்தை கட்டுப்படுத்த, இந்திய மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை தங்கள் மாநில மக்களுக்கு விதித்துள்ளது. மேலும் தமிழ்நாடு தங்கள் மாநில எல்லைகளை 24.03.2020 முதல் மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழகத்தை அடுத்து உள்ள கேரளமாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிக எண்ணிக்கையில் பரவி வருவதால் கேரளஅரசும் தங்கள் மாநில எல்லைகளை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணத்தை சார்ந்த 30 இளைஞர்கள் கேரள மாநிலத்திற்கு கட்டட வேலைக்குச் சென்றுள்ளனர். தற்போது இரு மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கும் வர முடியாமலும், வேலை இல்லாததால் அன்றாட தேவைகளுக்கு பணம் இன்றி பசியில் தவித்து வருகின்றனர்.

மேலும் அனைவரும் கேரள போலீசாரிடம் `நாங்க எங்க ஊருக்குச் செல்ல நடவடிக்கை எடுங்க...’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆனால், `அதெல்லாம் முடியாது இங்கேயே இருங்க' எனக் கூறிவிட்டனர். மேலும் 'சாப்பாடு இல்லாமல் எப்படி உயிர் வாழ முடியும்' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து தமிழகத்தை சேர்ந்த 30 இளைஞர்களும் தங்களின் நிலையை வீடியோவாக பதிவு செய்து, தமிழக அரசிடம் உதவி வேண்டியும், தங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Tags : #CORONAVIRUS