கேரளாவில் இங்கிலாந்து பயணி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்ட அதிசய சம்பவம் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு இன்னும் மருந்து எதுவும் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை. இதனால் பிற நோய்களுக்கு கொடுக்கும் மருந்தை மருத்துவர்கள் தற்காலிகமாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயணி ஒருவருக்கு கேரளா மருத்துவர்கள் ஹெச்.ஐ.வி-க்கு அளிக்கப்படும் மருந்தை கொடுத்து கொரோனாவை சரிசெய்து இருக்கின்றனர். இங்கிலாந்தில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் இங்கிலாந்து திரும்பி செல்வதற்காக விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. இதனால் இங்கிலாந்து பயணிகள் மற்றும் அந்த விமானத்தை சேர்ந்த விமானிகள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இங்கிலாந்து பயணிக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து தனிவார்டில் வைத்து சிகிச்சை அளித்தனர்.
கொரோனாவை குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் எச்.ஐ.வி. நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து மூலம் கொரோனா வைரசின் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கேரளா டாக்டர்கள் இங்கிலாந்து பயணிக்கும் எச்.ஐ.வி. மருந்து கொடுக்க முடிவு செய்தனர். இதற்கு அந்த பயணியும் ஒப்புக்கொண்டார். அதன்பேரில் அவருக்கு எச்.ஐ.வி. மருந்து கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு சில உடல்நலக்கோளாறுகள் இருப்பதால் அவர் வேண்டுமெனில் இங்கு தங்கி சிகிச்சை பெறலாம். அல்லது மீண்டும் இங்கிலாந்து செல்ல விரும்பினால் செல்லலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதேபோல புனேவிலும் ஒருவருக்கு எச்.ஐ.வி மருந்து மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
