“இப்டியுமா மனிதர்கள் இருப்பாங்க”!.. ‘இன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த பெண்’!.. பதற வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | May 16, 2019 11:41 AM
இன்ஸ்டாகிராமில் வாக்குப்பதிவு நடத்தியதில் மலேசிய சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகைப்படங்களைப் பகிரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போடுகிறார். அதில், ``இது உண்மையிலே மிக முக்கியமானது. இதில் ஒன்றைத் தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள். நான் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா..?” என வோட்டிங் முறையில் கேள்வி கேட்கிறார்.
நண்பர்கள் இப்படிக் கேட்கும்போது நம்மில் பலர் நகைச்சுவையாக கலாய்க்கும் விதமாகவும் நெகட்டிவ் பதில்களை அளிப்போம். அப்படிதான் பலர் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்துள்ளனர். இதில், சுமார் 69 சதவீதம் பேர் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்ய, அந்தச் சிறுமி தற்கொலை செய்திருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞரும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்பால் சிங், “நெட்டிசன்கள் அவருக்கு பாசிட்டிவ் வழியைக் காட்டியிருந்தால் ஒருவேளை அப்பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக நடந்துள்ளது. இந்த நாட்டில் தற்கொலை என்பது குற்றம் என்பதால், அதற்குத் தூண்டுதலாக இருந்து வாக்களித்தவர்களும் குற்றவாளிகள்தான். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் அதிகாரி ஒருவர், “எங்களின் பிரார்த்தனைகள் அந்தச் சிறுமியின் குடும்பத்தினருடன் இருக்கும். இன்ஸ்டாகிராமை மக்கள் பயன்படுத்தும்போது பாதுகாப்பானதாக மக்கள் உணர்வதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். எங்களின் முயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பும் தேவை. யாருக்காவது ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஒரு பதிவைக் கண்டால் உடனடியாக ரிப்போர்ட் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.