முடிவுக்கு வரும் ஐயுசி கட்டணம்?.. இனி தனியாக 'ரீசார்ஜ்' செய்ய தேவையில்லை!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Nov 18, 2019 05:44 PM

பொதுவாக ஒரு நெட்வொர்க்கில் இருந்து பிற நெட்வொர்க்குக்கு கால் செய்து பேசும்போது அந்த அழைப்பை அவர்கள் ஏற்று பேசுவதற்கான சிறு கட்டணத்தை அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். இது நிறுவனங்களுக்கான இணைப்பு (ஐயுசி) கட்டணம் என அழைக்கப்படும். இதற்கு ஒவ்வொரு காலுக்கும் 6 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும் என டிராய் அறிவித்தது.

IUC Charge ending from January 2020, details inside

ஜியோ நிறுவனம் சந்தையில் கால் எடுத்து வைத்ததுமே, தனது வாடிக்கையாளா்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதியை முழுமையாக அளித்து வந்தது. வாடிக்கையாளா்களிடமிருந்து அழைப்புக் கட்டணம் வசூலிக்காவிட்டாலும், போட்டி நிறுவன தொலைபேசி எண்களுக்கு அவா்கள் விடுக்கும் அழைப்புகளுக்காக, அந்த நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ ஐயுசி கட்டணத்தை அளித்து வந்தது.

அந்த வகையில், ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ இதுவரை ரூ.13,500 கோடி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.எனினும், பிற நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு ‘மிஸ்டு கால்’ மட்டுமே தந்து பேசுவதால், அந்த நிறுவனங்களிடமிருந்து ஐயுசி கட்டணங்கள் வசூலாவதில்லை. இதனால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று ஜியோ கூறியது. இதையடுத்து இந்த ஐயுசி கட்டண முறையை வருகின்ற ஜனவரி 2020-ம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வருவதாக டிராய் அறிவித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் டிராய் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் கலந்து கொண்டன. ஐயுசி கட்டணம் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஒருவேளை ஜனவரி மாதத்துடன் ஐயுசி கட்டணம் முடிவுக்கு வந்தால் ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய முறையில் இலவசமாகவே பேசலாம். மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேச தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

Tags : #JIO