'ஃபேஸ்புக்'ல வொர்க் பண்றப்போ 'சீக்ரெட்'டா எல்லாத்தையும் 'ஜெராக்ஸ்' எடுத்து வச்சுருக்காங்க...! ஒவ்வொண்ணா 'ரிலீஸ்' செய்த 'விசில் ப்ளோயர்' யாரு தெரியுமா...? - 'அதிர' வைக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்சமூக நலனை காட்டிலும் லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு ஃபேஸ்புக் செயல்பட்டு வருவதை 'விசில் ப்ளோயர்' (Whistle blower) என்ற பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போது யார் அந்த பெண்மணி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், சர்ச்சைக்குரிய நிறுவனமாகவும் உள்ளது. ஃபேஸ்புக் தனது தளத்தில் வெறுப்பரசியல் கருத்துகளை கையாளும் விதம் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஃபேஸ்புக்கின் வர்த்தகம் சார்ந்த தில்லுமுல்லுகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தின. அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழான 'வால்ஸ்டிரீட் ஜர்னல்' இது குறித்த செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எதிர்வினையைத் தூண்டும் கருத்துகளையே ஃபேஸ்புக் லாப நோக்கில் முன்னிறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது, மேலும், ஃபேஸ்புக்கின் நிறுவனம் நிர்வாகம் செய்து வரும் இன்னொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் குறித்த செயல்பாடுகள் பல இளம் பெண்கள் நலனுக்கு ஆபத்தாக இருப்பதை ஃபேஸ்புக் நிறுவனம் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்த ரகசிய கோப்புகளை பகிர்ந்துக்கொண்டு நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளை அம்பலமாக்க உதவிய 'விசில்ப்ளோயர்' யார் என்பது குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. ஃபேஸ்புக்கில் சிலகாலம் பணியாற்றி பின் அங்கிருந்து வெளியேறிய பிரான்சிஸ் ஹாகன் எனும் பெண்தான் அவர் என்பது தெரியவந்துள்ளது.
37 வயதாகும் ஹாகன், ஃபேஸ்புக் குழுவில் ப்ராடக்ட் மேனேஜராக பணியாற்றினார். ஃபேஸ்புக் நிறுவன செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியதாகவும், அதற்கு முன் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை நகலெடுத்து வைத்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிபிஎஸ் டிவிநிகழ்ச்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகள் மிக மோசமாக இருப்பதை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் ஃபேஸ்புக் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், "தற்போதுள்ள ஃபேஸ்புக் வடிவம் சமூகத்தை பிளவுபடுத்தி, உலகின் பல பகுதிகளில் இன வன்முறைக்கு வித்திடுகிறது" என அவர் கூறியுள்ளார்.
சமூகத்தின் பாதுகாப்பை விடவும் பணம் சம்பாதிப்பதையே ஃபேஸ்புக் முக்கியமாக நினைக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஃபேஸ்புக் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன. எங்கள் நிறுவனத்தின் ஆய்வுகளை மிகவும் மேலோட்டமாக அணுகி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் மறுப்பு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
