'7 மணி' நேரம் முடங்கினதுக்கே இப்படியா...? ஓவர் நைட்ல மார்க்-க்கு விழுந்த பேரிடி...! வாட்ஸ் அப், பேஸ்புக்-கு என்ன தான் ஆச்சு...? - பலதடவ 'ஸ்விட்ச் ஆஃப்' செய்து ஆன் பண்ண மக்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஃபேஸ்புக், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் நேற்று (04-10-2021) இரவு திடீரென செயல்படாமல் முடங்கின. இதனால் ஃபேஸ்புக் நிறுவனரும் சி.இ.ஓ.வுமான மார்க் சக்கர்பெர்க் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டையும் உலக அளவில் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்று சரியாக இரவு 9 மணி முதல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூன்றின் சேவையும் முடங்கியது.
இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டது. இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் குழம்பி போயினர். தங்கள் மொபைல் போனில் தான் பிரச்சனை என பல தடவை ஆஃப் செய்து ஆன் பண்ணினர். சிலர் டெலிகிராம் உள்ளிட்ட வலைத்தளங்களை உபயோகிக்க தொடங்கினர். மேலும் தனி நபர் உபயோகம் அல்லாமல் நிறுவனங்களும் வாட்ஸ் அப் மூலம் தங்கள் பணிகளை திட்டமிட்டு நடத்தி வருகின்றனர். ஆகவே அந்த பணிகளும் முடங்கியது.
சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டது மிகப் பெரிய சேவை பாதிப்பு என டவுண்டிடெக்டர் (Downdetector) நிறுவனம் கூறியுள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதன் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) சொத்து மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்தது. ஒருசில மணி நேரங்களிலேயே ஏழு பில்லியன் அமெரிக்க டாலரை இழந்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இதனால், அவரது சொத்து மதிப்பு 120.9 பில்லியன் டாலராக குறைந்தது. அதோடு, உலக பணக்காரர் வரிசையில் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் 5-வது இடத்துக்கு மார்க் சென்றுள்ளார். மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதியில் இருந்து இதுவரை 19 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் இளம் பெண்களை தாழ்வு மனப்பான்மையை ஊக்குவிப்பதாக உள்ளதாகவும், மேலும், அவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் ஃபேஸ்புக் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்ததாக வால்ஸ்டீரிட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஃபேஸ்புக் நிறுவனம் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.

மற்ற செய்திகள்
