'அரசியலுக்கு 'ரெஸ்ட்' கொடுத்த... அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்'!.. ஏன் இந்த திடீர் முடிவு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசியலில் இருந்து இடைவெளி எடுக்கப் போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் மாஃபா பாண்டியராஜன். அதன்பின்னர் தேமுதிக-வில் இணைந்து 2011 சட்டமன்றத்தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டு வெற்றிகண்டார்.
எனினும், அதிருப்தியின் காரணமாக தேமுதிக-வில் இருந்து விலகிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக-வில் இணைந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஆவடி தொகுதியில் களம்கண்டு வெற்றியும் பெற்றார். அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
இந்த சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அரசியலிலிருந்து ஒதுங்கி தொழிலில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
மாஃபா என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டியராஜன், அமைச்சர் பதவியேற்ற பின் தொழிலில் அவர் வகித்த பொறுப்புகள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது ஆவடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தொழிலை கவனிக்கச் சென்றுவிட்டார்.
மாஃபா மற்றும் சி.எல்., மனிதவள நிறுவனத்தின் தலைவராக, நேற்று பாண்டியராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், "மாஃபா மனிதவள நிறுவனம், ஒரு காலத்தில், இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது. அமைச்சராக பொறுப்பேற்றதால், நிறுவனப் பணிகளில் கவனம் செலுத்தாமல், தீவிர அரசியலில் மட்டுமே ஈடுபட்டேன். தற்போது, தொழிலை கவனிக்க முடிவு செய்து பொறுப்பேற்றுள்ளேன்.
அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்த உள்ளேன். சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களாக மாற்றும் ஆலோசனைகள், மனிதவளங்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன். இதற்காக, அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வளிக்க உள்ளேன். அதேநேரத்தில், அதிமுகவில் பொறுப்புகளை தொடர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மாஃபா பாண்டியராஜன் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
