ஏர்டெல், ஜியோ, வோடபோனுக்கு '2 வருடங்கள்' அவகாசம்.. கட்டண 'உயர்வு' முடிவுக்கு வருமா?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Nov 21, 2019 04:50 PM

இதுவரை இல்லாத அளவுக்கு வோடபோன் நிறுவனம் செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் 50,922 கோடி ரூபாய் நஷ்டத்தினை சந்தித்து உள்ளது. அதேபோல ஏர்டெல் நிறுவனமும் 23,045 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக அறிவித்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு இரண்டு நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்ததால் தங்களது கட்டணத்தை டிசம்பர் 1 முதல் உயர்த்த போவதாக அறிவித்தன.

Airtel and Vodafone get 2 years to clear spectrum dues

மறுபுறம் வோடபோன், ஏர்டெல், ஜியோ,பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 92,642 ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டி இருந்தது. இதனை விரைவாக செலுத்த வேண்டும் என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதோடு அரசுக்கு செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூபாய் 42 ஆயிரம் கோடியையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டியது உள்ளது.

மொத்தமாக இவ்வளவு பெரிய தொகையையும் செலுத்துவது கடினமானது என்பதால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்தன. இந்தநிலையில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்து உள்ளது. இதை பரிசீலித்த மத்திய அரசு, செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய, 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளது.

இதற்கான ஒப்புதல், கேபினட் கூட்டத்தில் வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம், வோடபோன்-ஐடியா செலுத்த வேண்டிய 23,920 கோடி ரூபாய், ஏர்டெல் செலுத்த வேண்டிய 11,746 கோடி ரூபாய், ரிலையன்ஸ் ஜியோ செலுத்த வேண்டிய 6,670 கோடி ரூபாய் ஆகியவற்றை, உடனடியாக விடுவிப்பதில் இருந்து சற்று அவகாசம் கிடைத்திருக்கிறது. விருப்பப்பட்டால் தவணை முறையில், தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தவும் மத்திய அரசு வாய்ப்பளித்திருக்கிறது.

இருப்பினும், அடுத்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது, தற்போதுள்ள அலைக்கற்றை நிலுவைத் தொகைக்கான வட்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அவகாசம் வழங்கி இருப்பதால் ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் தங்களது கட்டண உயர்வை கைவிடுமா? அல்லது ஏற்கனவே அறிவித்தது போல டிசம்பர் 1 முதல் புதிய கட்டணங்களை அமல்படுத்துமா? என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்டண உயர்வுக்குபின் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #JIO