'பப்ஜி' மதன் கைது!.. 'குவியும் புகார்களால்... கூடிக்கொண்டே போகும் சிக்கல்!.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்யூடியூபர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சேலத்தை சேர்ந்த மதன் குமார் என்பவர் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, 'டாக்சிக் மதன் 18' என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன், ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்ததால், அவரின் யூடியூப் சேனலுக்கு பார்வையாளர்கள் அதிகமாகி, 7.8 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் சேர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன. சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். பிறகு, பப்ஜி மதன் தலைமறைவானார்.
இதனையடுத்து அவர் மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முன் ஜாமீன் கோரி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை எனவும் வாதாடினார்.
இதற்கிடையே, மதனுக்கு உதவியாக இருந்த அவரது மனைவி கிருத்திகா நேற்று கைது செய்யப்பட்டு, ஜூன் 30 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. பின்னர், மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதை கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சு காதுகொடுத்து கேட்கமுடியாத அளவிற்கு இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என மதன் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டதாக பதிலளித்தார்.
அதற்கு நீதிபதி, அந்த பதிவுகளை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று (18.6.2021) தர்மபுரியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த மதனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதன் காரணமாக, மதனின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
