சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்பட உள்ள ‘முதல்’ பெண்.. ‘கண்ணை மறைத்த காதல்’!.. யார் இந்த ஷப்னம்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு சுதந்திரம் அடைந்த பின், பெண் குற்றவாளி ஒருவர் முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் பவன்கேதா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியர் சவுகத் அலி. இவரது மகள் ஷப்னம், வரலாறு மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தனது வீட்டுக்கு முன் மரம் அறுக்கும் தொழில் செய்து வந்த சலீம் என்பவரை ஷப்னம் காதலித்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷப்னம் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அடைந்த ஷப்னம் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனது காதலன் சலீமுடன் சேர்ந்து தாய், தந்தை, 2 சகோதரர்கள், சகோதரி, மைத்துனர் மற்றும் 10 வயது அண்ணன் மகன் உள்ளிட்டோரை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றமும், 2015-ல் உச்ச நீதிமன்றமும் இருவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. தற்போது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஷப்னத்தின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். இதனால் ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சிறையில், பெண்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தனி அறை உள்ளது. இது 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின், பெண் குற்றவாளிகள் யாரும் தூக்கிலிடப்பட்டதில்லை. முதல் முறையாக ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதி விரைவில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட்ட, மீரட்டைச் சேர்ந்த பவன் ஜலாட் என்பவர் தான், ஷப்னத்தையும் தூக்கிலிடுவதற்கான பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். தண்டனை நிறைவேற்றப்பட்டால், சுதந்திரத்துக்கு பின் தூக்கிலிடப்பட்ட முதல் பெண் குற்றவாளியாக ஷப்னம் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷப்னம் தனது குடும்பத்தினரை கொலை செய்யும்போது 2 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு சிறைக்குள் முகமது தாஜ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 12 வயதாகும் முகமது தாஜை, புலந்த்ஷாரில் வசிக்கும் ஷப்னத்தின் நண்பர் உஸ்மான் சைஃபி என்பவர் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், தனது தாயின் தூக்கு தண்டனையை கருணையின் அடிப்படையில் நிறுத்த வேண்டுமென குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மகன் முகமது தாஜ் வேண்டியுள்ளார்.