'உயருகிறதா சினிமா டிக்கெட் கட்டணம்'?... 'மதுரை ஐகோர்ட்' கிளை அதிரடி உத்தரவு !
முகப்பு > செய்திகள் > தமிழகம்சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு ஒன்றைப் போட்டுள்ளது.

தமிழக திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்குச் சமீபத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார், போனிபாஸ், ராம்குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீசரன் ரெங்கராஜன் வாதிடுகையில், திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கையுடன் செயல்படும். காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வாதிட்டார். இதனிடையே திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
அதில், ''திரையரங்குகளில் தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அதிக செலவாகும். இதனால் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும். நொய்டா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும்'' என வாதிட்டார்.
இதற்கிடையே மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிடுகையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் திரைப்படங்களுக்காக 3 நாட்களுக்கு பெரும்பாலான திரையரங்குகளில் நூறு சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை 50 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அரசாணையைத் திரும்பப் பெற்று, இருக்கையை 50 சதவீதமாகக் குறைத்ததற்காக அரசை நீதிமன்றம் பாராட்டுகிறது. அதேபோன்று சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள்.

மற்ற செய்திகள்
