
'இனிமேல் இந்த காரணத்தை சொல்லி பெற்றோர்கள் தப்பிக்க முடியாது'... வரதட்சணை தொடர்பான வழக்கில் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தையைப் பொறுப்புள்ள குடிமகனாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கடலூர் மகளிர் நீதிமன்றம், கணவன் மற்றும் கணவனின் பெற்றோருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த பெற்றோர், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக் கோரியிருந்தனர்.
அந்த மனுவில், ''எங்கள் மகனுக்குத் திருமணமான நாளிலிருந்து நாங்கள் தனியாகத்தான் இருந்து வந்ததாகவும், மருமகளின் தற்கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். மகனுடன் சேர்ந்து மனுதாரர்களும் மருமகளைத் துன்புறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். ஒருபுறம் மகனுடன் வசிக்கவில்லை என்று கூறி தப்பிக்கும் பெற்றோர், மகனுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை மற்றும் பணம் நகைகளைப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மகன் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் வசிக்கவில்லை எனக்கூறி, பெற்றோர்கள் தப்பித்துக் கொள்வது இந்த சமூகத்திற்குத் தவறான தகவலைக் கொண்டு செல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது, இருப்பிடம் தருவது, வளர்ப்பது மற்றும் நல்ல கல்வியை வழங்குவது, நல்ல வேலையைப் பெற தங்கள் குழந்தையை ஊக்குவிப்பது மட்டுமல்ல, பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமைதான் எனக் கூறிய நீதிபதி, தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து விட்டார்.

மற்ற செய்திகள்
