'வேலைக்கு போக வேண்டாம்'... 'இத மட்டும் செஞ்சா சீக்கிரம் செட்டில் ஆகலாம்'... 'காதல் ஜோடி' போட்ட விவகாரமான பிளான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாழ்க்கையில் உழைக்காமல் குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் அது எப்படிப் பட்ட முடிவைக் கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.
கோவை மாவட்டம் காந்தி மாநகரைச் சேர்ந்தவர் சூர்யா என்கிற சூரிய பிரகாஷ். 21 வயதான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து பாதியில் படிப்பை விட்டவர். அதேபோன்று விருதுநகரைச் சேர்ந்தவர் தமன்னா என்கிற வினோதினி. இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார். அப்போது வினோதினிக்கும், பிரகாசுக்கும் நட்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அடிக்கடி 2 பேரும் செல்போனில் பேசி காதலை வளர்த்தனர். ஒரு கட்டத்தில் மாணவி படிப்பு முடிந்ததும் ஊருக்கு செல்லாமல் காதலருடன் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் காந்தி மாநகர் பகுதியில் எடுத்துத் தங்கி இருந்தனர். அப்போது அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது.
இதனால் சிறு, சிறு வேலைகளுக்குச் சென்ற நிலையில் அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் எளிதில் பணம் சேர்த்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என இருவரும் தீர்மானித்தனர். அப்போது தான் கஞ்சாவை வாங்கி விற்கலாம் என இருவரும் முடிவு செய்தனர். அதன்மூலம் நல்ல பணம் கிடைக்கும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என முடிவு செய்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
மேலும் பிரகாஷ் கல்லூரியில் படிக்கும் போது அவரது நண்பர்கள் அவரை சூர்யா என்றே அழைத்து வந்துள்ளனர். கஞ்சா விற்க ஆரம்பித்ததும், சூரிய பிரகாஷ் தனது பெயரை சூர்யா என்றே எல்லோரிடமும் தெரிவித்தார். இதேபோன்று தனது காதலி பெயரையும் மாற்றச் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர் தனது பெயரை தமன்னா என மாற்றிக் கொண்டார்.
இவர்கள் 2 பேரும் சூர்யா, தமன்னா என்ற பெயரிலேயே கோவை பகுதிகளில் உலாவந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். அதோடு விரைவில் திருமணம் செய்யவும் இருவரும் திட்டமிட்டனர். இந்நிலையில் கோவை கிழக்கு உதவி கமிஷனர் அருண், தலைமையிலான போலீசார் பீளமேடு அடுத்த நேரு நகர் வீரியம் பாளையம் ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் வந்த நிலையில், போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை மறித்து, அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போது தான் கஞ்சா விவகாரம் வெளியில் தெரிய வந்துள்ளது. அதோடு அவர்களிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களுக்கு வேறு கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு உள்ளதா? இதுபோன்று வேறு எங்காவது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.