'தங்கச்சி தான் எங்க உசுரு'... 'நடந்து போயிட்டு இருக்கும்போது வந்த அலறல் சத்தம்'... 'காப்பாற்ற ஓடிய 2 அண்ணன்கள்'... குடும்பத்தை புரட்டி போட்ட சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தங்கையைக் காப்பாற்ற வேண்டும் என முயன்ற 2 அண்ணன்கள் தங்கையுடன் சேர்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வடமூலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் ரூபி என்ற சுகன்யா. 23 வயதான இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் வனப் பகுதிக்குள்'சென்று விறகு சேகரிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை 3 மணி அளவில் விறகு சேகரிக்க வீட்டின் அருகே 300 மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது வனத்தில் புதர்கள் மூடியவாறு இருந்த 70 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்தார்.
நடந்த சென்று கொண்டிருந்த தங்கையின் அலறல் சத்தம் கேட்டு பின்னால் வந்து கொண்டிருந்த சுகன்யாவின் சகோதரர் தமிழழகன் மற்றும் அவரது சித்தப்பா மகன் முரளி ஆகியோர் ஓடி வந்தார்கள். உயிருக்கு உயிரான தங்கை கிணற்றுக்குள் விழுந்து தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இருவரும் ஒருவர் பின் ஒருவராகக் கிணற்றுக்குள் குதித்தார்கள். ஆனால் கிணற்றுக்குள் தண்ணீர் மற்றும் சேறு அதிகமாகக் காணப்பட்டதால் அவர்களால் தங்கையைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும் அவர்களாலும் வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் தேவாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் கூடலூர் தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். தீயணைப்புத் துறையினர் அந்த கிணற்றுக்குள் இறங்கி அவர்கள் 3 பேரையும் தேடினார்கள். அப்போது கிணற்றுக்குள் சேறு-சகதியில் சிக்கி அவர்கள் 3 பெரும் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
பின்னர் பல்வேறு போராட்டத்துக்குப் பின்னர் இரவு 7.30 மணிக்கு இளம்பெண் சுகன்யா மற்றும் முரளி, தமிழழகன் ஆகியோரின் உடல்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டு கிணற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தங்கையைக் காப்பாற்றச் சென்று, தங்கை உட்பட 2 அண்ணன்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
