'எதுவா இருந்தாலும் என் மச்சான் இருக்கானுங்க, அவங்க பாத்துப்பான்னு சொல்வானே'... கூடவே இருந்த நண்பர்கள் போட்ட கொடூர ஸ்கெட்ச்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பகைவனின் பகையை விட, நண்பனின் பகையே ஆபத்தானது என்ற கூற்றிற்கு இணங்க இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள புறநகரைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் காமராஜ். 22 வயது இளைஞரான இவரின் நண்பர்கள், நேற்று இரவு கம்மியம் பேட்டையில் உள்ள நகராட்சிக் குப்பைக் கிடங்கிற்குப் பின்புறம் உள்ள இடத்திற்குச் சென்று மது அருந்தலாம் என அழைத்துள்ளார்கள். இதையடுத்து காமராஜ் அவரது நெருங்கிய நண்பன் தேவா மற்றும் 6 நண்பர்கள் சேர்ந்து மது குடிக்கச் சென்றுள்ளார்கள். ஒன்றாகச் சேர்ந்து மது குடித்த பின்பு தேவாவின் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து காமராஜ் வீட்டுக்குப் புறப்பட்டார்.
மற்ற 5 நண்பர்களும் மின்னல் வேகத்தில் வேகமாக பைக்கில் சென்று விட்டார்கள். தேவாவும், காமராஜும் ஜெ.ஜெ. நகருக்கு அருகே தங்களது பைக்கில் மெதுவாகப் பேசிக்கொண்டே வந்துள்ளார்கள். அப்போது மற்ற 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிள்களில் வந்து 2 பேரையும் மறித்தனர். இதனால் இருவரும் நிலை தடுமாறிச் சுதாரிப்பதற்குள், 5 பேரும் சேர்ந்து தேவாவைச் சரமாரியாகத் தாக்கினார்கள். பின்னர் காமராஜையும் தாக்கி, அவரை தங்களது மோட்டார் சைக்கிளில் தூக்கிப் போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றார்கள்.
இதையடுத்து குப்பைக் கிடங்கு அமைந்துள்ள ஸ்ரீராமுலு நகர் பகுதிக்கு காமராஜைக் கொண்டு வந்த 5 நண்பர்களும், அவரை மார்பு பகுதியில் கத்தியால் சரமாரியாகத் தாக்கினார்கள். பின்னர் அவரது கழுத்தைத் துடிக்கத் துடிக்க அறுத்த அவர்கள், காமராஜ் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்த பின்பு அங்கிருந்து சென்றார்கள். சம்பவம் குறித்து அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். படுகாயமடைந்த தேவா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரியச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொலை சம்பவம் நடந்த ஸ்ரீராமுலு நகர்ப் பகுதி இருள் சூழ்ந்தது என்பதுடன், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்காது. அதோடு காமராஜ் வசித்து வரும் புதுநகர், திருவந்திபுரம் சாலையிலிருந்து கேப்பர் மலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. எனவே நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, அவரை மது குடிப்பதற்காகக் குப்பைக் கிடங்கு பகுதிக்கு அழைத்து வந்து இந்த படுகொலையைச் செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தப்பி ஓடிய நபர்களைக் கைது செய்த பின்பு தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளார்கள்.
எதுவா இருந்தாலும் என் நண்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் என வார்த்தைக்கு வார்த்தை கூறுவானே, ஆனால் அவர்களே எனது மகனுக்கு எமனாக மாறி விட்டார்களே எனப் பெற்றோர் கதறித் துடித்தார்கள். உடன் பழகிய நண்பர்களே இளைஞரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
