MANDOUS CYCLONE : மாண்டஸ் புயல்... மாடியிலிருந்து பெயர்ந்த கண்ணாடி.. சிலிண்டர் டெலிவரி ஊழியரின் கழுத்தில் பாய்ந்து பலி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே வெள்ளிக்கிழமை நள்ளிரவு அல்லது சனிக்கிழமை அதிகாலையில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே காரைக்குடி தனியார் காஸ் சிலிண்டர் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த, சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக டூவீலரில் சென்றுள்ளார். அப்போது காரைக்குடி, தந்தை பெரியார் நகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்த இவர் மீது கண்ணாடி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாண்டஸ் புயல் எதிரொலியாக வழக்கத்தைவிட காற்று பலமாக வீசிக்கொண்டிருந்த அந்நேரம் அவ்வழியே பழனியப்பன் செல்ல, அங்கிருந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 3-வது மாடியில் பொருத்தியிருந்த கண்ணாடி திடீரென பெயர்ந்ததுடன், அங்கிருந்து அந்த சமயத்தில் அவ்வழியே போன பழனியப்பனின் கழுத்தில் பாய்ந்தது.
வந்த வேகத்தில் கழுத்தில் பாய்ந்து கண்ணாடி வெட்டியதில் பழனியப்பன் ரத்த வெள்ளத்தில் தவிக்க, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பழனியப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தீயணைப்புத்துறை உதவியினருடன் இதை விசாரித்த காவல் துறையினர், குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கண்ணாடிகளை அகற்றியதாக தெரிகிறது.
இதேபோல் மாண்டஸ் புயல் எதிரொலியாக புதுச்சேரி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரி பிள்ளைச்சாவடி பகுதியில் உள்ள வீடுகள் சிலவும் சேதமடைந்தன.