VIDEO : "தமிழ்நாடே போனாலும் நான் காசு குடுத்துதான் போவேன்.." - கண்டக்டெரிடம் அடம் பிடித்த பாட்டிம்மா.. 😍
முகப்பு > செய்திகள் > தமிழகம்'தமிழ்நாடே காசு கொடுக்காமல் டிக்கெட் வாங்கி பஸ்ஸில் சென்றாலும் நான் காசு கொடுத்து தான் போவேன்' என்று கண்டக்டரிடம் பாட்டிம்மா ஒருவர் அடம்பிடிக்கக்கூடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாகவே பழங்கால பாட்டிகள் எந்த ஒரு விஷயத்தையும் இலவசமாக கொடுக்கும் பொழுது, அது ஒரு ரூபாயா இருந்தாலும் உரிய தொகை கொடுத்து வாங்க நினைக்கக் கூடிய சுபாவம் கொண்டவர்கள். பெற்ற பிள்ளைகளே விலையுயர்ந்த பொருட்களை கொடுத்தாலும் கூட, வேண்டாம் என்று மறுப்பார்கள். இதேபோல் தேவைக்கு மீறி பணத்தையும் எதிர்பார்க்காத பாட்டிகளையும் காண முடியும்.
இன்று வரை கோவை கமலாத்தாள் பாட்டி இட்லி ஒரு ரூபாய்க்குதான் விற்பனை செய்துவருகிறார் என்பது ஏறக்குறைய அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஒருமுறை பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருது நிகழ்ச்சியில் பேசிய கமலாத்தாள் பாட்டி, “மரணம் வரையில் இட்லி ஒரு ரூபாய்தான். எது எவ்வளவு விலை உயர்ந்தாலும் என் இட்லி விலை உயராது” என்று கூறியிருந்தார். அப்படிதான் தற்போது இன்னொரு பாட்டி வைரலாகி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலவச பஸ் பயணத்திற்கான ஆணை பிறப்பித்து இருந்தார். இதனை தொடர்ந்து அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதலாக தமிழ்நாட்டில், பெண்கள் பேருந்து பயணத்தில் கட்டணம் இல்லா டிக்கெட்டுகளை பெற்று பயணம் செய்து வருகின்றனர். பல பெண்கள் இந்த வசதி குறித்து தங்களுடைய நன்றியை நெகிழ்ந்து அந்த நேரத்தில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பேருந்தில் ஏறிக்கொண்ட பாட்டி ஒருவர், கண்டக்டரிடம், “நான் காசு கொடுத்துதான் டிக்கெட் வாங்குவேன்” என்று அடம்பிடிக்கக்கூடிய வீடியோவை காண முடிகிறது. அதில் தன்னுடைய காசை வாங்கவில்லை என்றால் தனக்கு டிக்கெட் வேண்டாம், என கூறி டிக்கெட்டையும் வாங்க மறுக்கிறார். கண்டக்டரோ, “அட என்ன பாட்டிம்மாம்ம் உன் கூட ரோதனையா போச்சு” இன்று பாட்டிம்மாவை சமாதானம் செய்து பார்க்கிறார். ஆனாலும் அந்த பாட்டிம்மா, “காசு கொடுத்தே பயணிப்பேன்” என்று விடாப்படியாக மல்லு கட்டுகிறார். இப்படி இந்த வயதிலும் பாட்டிம்மாவின் வைராக்கியத்தை பார்த்து பலரும் க்யூட் என்று சொல்லி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
