1 லாட்டரி டிக்கெட் வாங்கி அதுல ஜெயிக்கிறவர் லெஜெண்ட்.. ஆனா இவரு அல்ட்ரா லெஜெண்ட் போலயே.. ட்ரிக்கை கண்டுபிடிச்சு அடிச்ச நபர்.. யாரு சாமி இவரு..?
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி அதில் பரிசு பெற்றவர்கள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரே நேரத்தில் 200 லாட்டரி டிக்கெட்களை வாங்கி அவை அனைத்திலும் பரிசு வென்றவரை பார்த்திருக்கிறீர்களா? ஆனால், அமெரிக்காவில் அப்படியொரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
லாட்டரி டிக்கெட்
அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமயங்களில் விபத்து போல சில நபர்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த அலி கெமி என்பவர் திட்டமிட்டே லாட்டரி டிக்கெட்டை வாங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள அலெக்ஸ்சாண்ட்ரியா நகரை சேர்ந்தவர் அலி கெமி. இவர் நகரத்தை விட்டு வெளியேற நினைத்திருக்கிறார். அதற்கு முன்னர் தன்னுடைய அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பிய அலி, கடந்த 6 ஆம் தேதி, விர்ஜீனியாவில் உள்ள கடை ஒன்றில் 200 ஒரு டாலர் லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். தான் வாங்கிய அனைத்து லாட்டரியிலும் ஒரே மாதிரியான நான்கு எண்களை உள்ளீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார் அவர்.
வெற்றி
இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாள் மற்றும் பிறந்த மாதம் ஆகியவை வரும் 0-2-6-5 என்ற எண்களை தான் வாங்கிய அனைத்து லாட்டரியிலும் உள்ளீடு செய்திருக்கிறார் அலி கெமி. அதிர்ஷ்டவசமாக அவர் தேர்ந்தெடுத்த எண்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு டிக்கெட்டின் அதிகபட்ச பரிசு 5000 அமெரிக்க டாலர்கள். ஆகவே இதன்மூலம் கெமிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 8.1 கோடி ரூபாய்) கிடைத்திருக்கிறது. இதற்கான காசோலையையும் விர்ஜீனியா லாட்டரி நிறுவனம் அவருக்கு அளித்திருக்கிறது.
முன்னதாக, மிசோரியிலும் இதேபோன்ற சம்பவம் நடந்திருந்தது. அங்கே இரண்டு பேர் ஒரே மாதிரியான எண்களை பயன்படுத்தி கடந்த 30 ஆண்டுகளாக லாட்டரியில் வென்று வந்திருக்கின்றனர். இதுவரையில் அவர்கள் இருவரும் 39 லட்சம் வரையில் லாட்டரியில் பரிசாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.