புது மைல்கல்லுக்கு ஆயுத பூஜை நடத்திய கிராம மக்கள்.. கோவை அருகே சுவாரஸ்யம்.. வைரல் PIC..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை அருகே புதிதாக நடப்பட்ட மைல் கல்லிற்கு கிராம மக்கள் சிலர் ஆயுத பூஜை நடத்தியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆயுத பூஜை
பொதுவாகவே ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் தமிழகத்தில் பிரசித்திபெற்றவை. மக்கள் தங்களுடைய வாகனங்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை பூவால் அலங்கரித்து அவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து சாமி குடும்பிடுவர். தொழிலாளர்கள் தங்களுடைய தொழில் சம்பந்த பொருட்கள் மற்றும் கருவிகளை சுத்தம் செய்து அவற்றை கடவுளாக வழிபடுவார்கள். இந்நிலையில், கோவை அருகே உள்ள கிராமம் ஒன்றில் புதிதாக நடப்பட்ட மைல் கல்லிற்கு மக்கள் ஆயுத பூஜை கொண்டாடியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
மைல் கல்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவபட்டியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் புதிய மைல் கல் நட்டு வைத்தனர். அதில் சிறுவாணி 20 கிலோ மீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலர் இந்த மைல் கல்லிற்கு வாழைமரம் கட்டி, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்திருக்கின்றனர். மேலும், மைல் கல்லிற்கு எதிரே தலைவாழை இலை விரித்து அதில் அகல் விளக்குகள் வைத்து பொரி ஆகியவை வைத்து படையலும் செய்யப்பட்டிருக்கின்றன.
இதேபோல, முக்காளி செல்லும் வழியில் அமைக்கப்பட்ட மைல் கல்லிற்கும் சிலர் ஆயுத பூஜை வழிபாடு நடத்தியிருக்கின்றனர். அதிகாரிகள் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லை என்பதால் அக்கம் பக்க கிராமத்தை சேர்ந்த குறும்புக்கார இளைஞர்கள் சிலர் இந்த வினோத காரியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், ஒரு திரைப்படத்தில் இதேபோல ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். தற்போது கோவை அருகே நடைபெற்றிருக்கும் இந்த நிகழ்வை மக்கள் அந்த காமெடியுடன் தொடர்புபடுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பேசிவருகின்றனர்.