கணவரின் சம்பளம் எவ்வளவு..? தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடிய மனைவி.. அதிரவைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவருடைய சம்பள விபரத்தை அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தியிருக்கிறார் மனைவி ஒருவர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தகவல்களை அளிக்க, அதிகாரிகள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
![Wife Gets Husband Income Details Using Right To Information Wife Gets Husband Income Details Using Right To Information](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/wife-gets-husband-income-details-using-right-to-information.jpg)
ஊதியம்
பொதுவாக ஒருவருடைய ஊதியம் பற்றி குடும்ப உறவினர்கள் கேட்பது அசவுகர்யமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். ஆனால், கணவன் - மனைவி இடையே ஏற்படும் வழக்குகளில் கணவர் தனது ஊதியம் குறித்து தெரிவிக்காத பட்சத்தில் மனைவி, சட்டத்தின் வழியில் அதனை தெரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. இதனை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர் மத்திய தகவல் ஆணைய அதிகாரிகள். விவாகரத்து வழக்கில் பரஸ்பரமாக கணவன் மனைவி பிரியும்பட்சத்தில் கணவரின் உண்மையான ஊதியம் குறித்து தெரிந்தால் மட்டுமே உரிய இழப்பீடு தொகையை மனைவியால் கேட்டுப்பெற முடியும். ஆனால், தம்பதியிடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வரையில் செல்லும்போது, கணவரின் ஊதியத்தை குறித்து மனைவி அறிவது சிரமமே. ஆனால், அதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறது.
இந்த வழக்கில் சஞ்சு குப்தா, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கான தனது கணவரின் மொத்த வருமானம் குறித்த விவரங்களை அறிய RTI விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார். அதேபோல, தனது கணவரின் பிற வருமானங்கள் குறித்தும் அவர் விளக்கம் கேட்டிருந்தார். ஆனால், கணவர் மறுப்பு தெரிவித்திருந்தால் மத்திய பொதுத் தகவல் அதிகாரி (CPIO) சஞ்சு குப்தாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
மேல்முறையீடு
இதனையடுத்து அவர் முதல் மேல்முறையீட்டு ஆணையத்திடம் (FAA) உதவி கோரினார். ஆனால், அங்கேயும் கணவரின் வருமானம் குறித்த தகவல்களை அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து, மத்திய தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்திருக்கிறார் சஞ்சு குப்தா. இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம் பழைய உத்தரவுகள் மற்றும் நீதிமன்றங்களின் சமீபத்திய உத்தரவுகளை ஆய்வு செய்த பின்னர், அந்தப்பெண்ணுடைய கணவரின் வருமான விவரங்களை அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், கணவரின் ஊதியம் குறித்த விபரங்களை 15 நாட்களுக்குள் சஞ்சு குப்தாவிடம் ஒப்படைக்கவும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)