பிரியாணி 20 ரூபாய் .. அதுவும் இல்லையா?.. 'பசிக்குதா? எடுத்துக்குங்க!'.. ‘அந்த மனசுதான் சார் கடவுள்!’ - ‘நெகிழ வைக்கும்’ இளம்பெண்ணின் ‘வைரல்’ செயல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா காலம் என்னதான் கஷ்டங்களைக் கொடுத்தாலும் மனிதர்களிடையே மனிதத்தை மலரச் செய்து வருவதை காண முடிகிறது. மனிதர்களுக்கிடையே உண்டாகும் உணர்வுப்பூர்வமான மனிதாபிமானம் இந்த கஷ்டங்களையும் மறக்கடிக்கச் செய்கிறது. கோவையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் செயல் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
கோவை மாநகரில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களின் பசியைப் போக்குவதற்காக இளம் இல்லத்தரசி ஒருவர் 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 20 ரூபாய் கூட கொடுக்க முடியாதவர்களுக்கு இலவசமாகவே பிரியாணியை வழங்கும் இந்த பெண் பலராலும் கவனித்து வரப் படுகிறார். கோவை மாநகரம் புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் தான் சதீஷ், சப்ரினா என்கிற தம்பதியர்.
சென்னையை சேர்ந்த இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ள சப்ரினா தமது வீட்டின் முன்பு சிறிய அளவில் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன்படி 20 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் இந்த கடை மதியம் 12 முதல் 3 மணி வரை இயங்கும்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடைக்கு முன்பு உள்ள பெட்டி ஒன்றில் பிரியாணி பொட்டலங்களை வைத்து அதில், “பசிக்குதா எடுத்துக்கோங்க!” என்று கரும்பலகையில் எழுதி வைத்திருக்கிறார். இந்த பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பிரியாணி பொட்டலங்களை ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றவர்கள் விலையில்லாமல் எடுத்துச் சென்று சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கின்றனர்.
இது குறித்து பேசிய சப்ரினா, “சாலையோரங்களில் இருக்கும் சாதாரண கடைகளில் குறைந்தது 50 ரூபாயாவது பிரியாணி விற்கப்படுகிறது. எனினும் ஏழை எளியவர்கள் அவற்றை வாங்குவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் மதியம் ஒரு வேளை மட்டும் 20 ரூபாய்க்கு மூன்று நாட்களாக பிளெயின் பிரியாணி விற்று வருகிறோம். எனினும் அந்த 20 ரூபாயும் கொடுக்க முடியாத சூழலில் இருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பசியாற முடியாத ஆதரவற்றோர் மற்றும் ஏழை மக்கள் சப்ரினா கடைக்கு வந்து பிரியாணி பொட்டலங்களை நன்றிப் பெருக்குடன் எடுத்துச் செல்கின்றனர். சப்ரினாவின் செயல் பலதரப்பில் இருந்தும் பாராட்டை பெற்று வருகிறது.