JEE முதல் நிலைத்தேர்வில் தமிழக அளவில் முதலிடம்.. சாதித்துக்காட்டிய கோவை மாணவி தீக் ஷா..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்JEE முதல் நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் தமிழக அளவில் கோவையை சேர்ந்த தீக் ஷா என்னும் மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், இளநிலை தொழில்நுட்பம் பட்டப்படிப்புகளில் சேர JEE எனப்படும் நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதவேண்டும். இது இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் என்ஐடி, ஐஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் தகுதியை பெறுவர். இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் முதல் இரண்டரை லட்சம் பேர் முதன்மை தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இதிலும் தேர்ச்சி பெறுபவர்கள் ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
தேர்வு
வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் இந்த முதல்நிலை தேர்வில் வெற்றிபெறுவதை பல மாணவர்கள் தங்களது லட்சியமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான முதல் முதல்நிலை தேர்வில் கலந்துகொள்ள 8.7 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 7.69 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 407 நகரங்களில் 588 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் கோவையை சேர்ந்த தீக் ஷா என்னும் மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார். இவர் 100 க்கு 99.998 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார்.
நம்பிக்கை
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தீக் ஷா,"நான் இவ்வளவு மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. தேர்வு கடினமாகவே இருந்தது. இருப்பினும் நான் படித்த கேள்விகள் இருப்பதை கண்டவுடன் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும் என நம்பிக்கை பிறந்தது. அதன்படி நல்ல மதிப்பெண்களும் கிடைத்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்றார்.
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் தீக் ஷா JEE முதல் நிலைத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்திருப்பதை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.