குப்பைத் தொட்டியிலும், கிணற்றிலும் தனித்தனியே உடல் பாகங்கள்.. தண்ணீர் பாட்டிலால் கிடைத்த துப்பு.. கோவையில் பதைபதைப்பு சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையை அடுத்த துடியலூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட கை கிடப்பதை தூய்மை பணியாளர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, இந்த கை யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கு மத்தியில், கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியரான பிரபு என்பவர் மாயமானதாக அவரது மனைவி புகார் ஒன்றும் அளித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனையடுத்து, பிரபு தங்கி இருந்த அறையில் இருந்த பாட்டில் ஒன்றில் இருந்து எடுத்த கைரேகை மற்றும் துண்டிக்கப்பட்ட கையில் உள்ள ரேகை ஆகியவற்றை கைரேகை நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்த போது, அது பிரபு தான் என்பது உறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், பிரபு கொலை விவகாரம் குறித்து துப்பு துலக்க துணை சூப்பிரண்டு தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும், பிரபு தங்கி இருந்த சரவணம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள 150 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
அதில் பிரபுவை இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. தொடர்ந்து, பிரபுவின் செல்போனை ஆய்வு செய்த போது, கவிதா என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய பழக்கம் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதற்கு மத்தியில், கவிதாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் உருவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக, ஆத்திரத்தில் இருந்த பிரபு, தங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், தனது ஆண் நண்பர்கள் சிலருடன் இணைந்து திட்டம் போட்ட கவிதா, தனியாக பிரபுவை வரவழைத்து கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அது மட்டுமில்லாமல், அவரது உடல் பாகங்களையும் தனித்தனியாக நிறைய இடங்களில் வீசி உள்ளதும் தெரிய வந்துள்ளது. அப்படி தான், பிரபுவின் கை கொண்டு விசாரணை தொடங்கிய போலீசார், கவிதா உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். மேலும், பாழடைந்த கிணற்றில் இருந்து பிரபுவின் உடலை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு, 6 நாட்களில் துப்பு துலக்கிய போலீசார்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்ததுடன் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Also Read | ஒரே ஒரு விஷயத்தில்.. ராணி எலிசபெத்தை OverTake செய்த இளவரசி டயானா.. இணையத்தில் வைரலாகும் தகவல்!!