விபத்தில் சிக்கிய பெண்.. உயிரிழந்த பின் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விபத்தில் மூளை செயலிழந்த பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 5 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது.
விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கலைச் செல்வி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் முருகன் இறந்துபோன நிலையில் கலைச் செல்வி கூலி வேலை செய்து மகள்களை படிக்க வைத்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி, இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்திருக்கிறார் கலைச் செல்வி. உடனடியாக அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெரும் சோகம்
அங்கே அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அவருடைய மூளை செயலிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து இதுகுறித்து மருத்துவர்கள் கலைச் செல்வியின் உறவினர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். அப்போது அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் உடல் உறுப்புகள் தேவைப்படும் மருத்துவமனைகளின் பட்டியலை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
உடல் உறுப்புகள் தானம்
இதையடுத்து வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் கலைச் செல்வியின் 2 கண்கள், 2 சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகியவற்றை தானமாக பெற்று சென்னை காவேரி மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனை, பிரசாந்த் மருத்துவமனை, வேலூர் தனியார் மருத்துவமனை ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்புடன் தனித்தனி ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக இதுபோன்ற அறுவை சிகிச்சை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கலைச்செல்வியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 5 பேர் இழந்த வாழ்க்கையை திரும்பப் பெற்றிருக்கின்றனர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது.
Also Read | பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. வெளியானது வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.. முழு விபரம்.!