வேலூர் டூ சென்னை.. 3 மணிநேரத்துல இதயத்தை கொண்டு சேர்க்கணும்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பத்தூரில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் இதயத்தை சரியான நேரத்தில் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Also Read | அடுத்த வருஷமும் CSK காக விளையாடுவீங்களா? தோனி கூறிய ஸ்மார்ட் பதில்.. வைரலாகும் வீடியோ..!
சோகம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மதனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். 21 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி தினகரன் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி செல்லும்போது விபத்தில் சிக்கியிருக்கிறார். இதனால் படுகாயம் அடைந்த தினகரன் வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் தினகரன் மூளைச்சாவு அடைந்ததாக நேற்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தினகரனின் உறவினர்கள் அனுமதியளித்ததன் பலனாக அவரது இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை வேறு ஒருவருக்கு தானம் செய்யப்பட்டது.
ஆம்புலன்ஸ்
தினகரனின் இதயம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு பொருத்தப்பட இருந்தது. இதனால் தரை மார்க்கமாக இதயம் வேலூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட திட்டமிடப்பட்டது. இது போன்ற அவசர காலங்களில் உடல் உறுப்புகளை விரைவாக எடுத்துச் செல்வதில் நான்கு ஆண்டுகள் அனுபவம் உடைய வேல்முருகன் என்பவர் இந்தப் பணியை கையில் எடுத்தார். வழக்கமாக வேலூரிலிருந்து சென்னைக்கு பயணிக்க 3 மணி நேரம் ஆகும். 150 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த பயணத்தை ஒன்றரை மணி நேரத்தில் முடித்து இதயத்தை பத்திரமாக சென்னை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் வெல்முருகன்.
இதய மாற்று அறுவை சிகிச்சை
பொதுவாக இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவரது உடலில் இருந்து இதயம் எடுக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒருவரின் உடலில் அது பொருத்தப்பட வேண்டும். இதற்காக பிரத்யேக ஐசியு ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். இதில் இரண்டு டெக்னீஷியன்கள் மற்றும் இரண்டு மருத்துவ ஊழியர்கள் இருப்பர். முதலில் உடல்நலம் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து இதயத்தை எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் குழு பணியில் இறங்கும். அந்த இதயம் பிறருக்கு பொருத்துவதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா என்பதை இந்த குழு கண்டறியும். அதன் பிறகு இதயம் தானமாக வழங்கப்படும். இதுவே தனியார் மருத்துவமனையாக இருந்தால் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்வதற்காக அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்றிருக்கவேண்டும்.
கிரீன் காரிடார்
இப்படியான அவசர சூழ்நிலைகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உடலுறுப்புகளை கொண்டுசெல்லும் போது போலீசார் அந்த ஆம்புலன்ஸ் பயணிக்கும் சாலைகளை கண்காணிப்பர். அந்த சாலையில் இருக்கும் போக்குவரத்தை சரி செய்து விரைவாக ஆம்புலன்ஸ் பயணிக்க வழிவகை செய்து கொடுப்பர். இதனை கிரீன் காரிடார் என்று அழைக்கிறார்கள். அப்படி தினகரனின் இதயத்தை கொண்டுசெல்கையில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லை வரை சுமார் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு ஆம்புலென்ஸ் விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் பலனாக வேலூரில் இருந்து தினகரனின் இதயம் வெற்றிகரமாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் உடலில் பொருத்தப்பட்டது. வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டு சரியான நேரத்தில் இதயத்தை சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் வேல்முருகனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8