ஏதோ 'ஒண்ணு ரெண்டு' வாங்கிட்டு வந்துருப்பாங்கன்னு நெனச்சு வெளிய வந்து பார்த்தா... 'ஒரு டெம்போவே நிக்குது...' 'தம்பதி செய்த நெகிழ வைக்கும் காரியம்...' - திக்குமுக்காடி போன மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளின் நிலைக்கண்டு பொது மக்கள் பலர் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்பாத்தூர், ராம் நகர் பகுதியில் வசிக்கும் இளம் தம்பதிகள் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு மருத்துவமனை மூலம் உதவி செய்த சம்பவம் மருத்துவமனை டீன் முதல் கோவை மாவட்ட ஆட்சியர் வரை அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராம் நகரில் சிறிய கடை ஒன்றை நடத்தி வரும் இந்த தம்பதிகள் நேற்று காலை 11 மணியளவில் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றனர்.
அதன்பின், மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனை சந்தித்து, கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மின்விசிறிகள் வழங்க உள்ளதாக கூறியுள்ளனர். முதலில் ஏதோ ஒரு சில மின் விசிறிகள் தான் என நினைத்த மருத்துவமனை முதல்வர் ஒரு டெம்போ முழுவதும் மின்விசிறிகள் இருந்ததை பார்த்து டீன் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தம்பதியிடம் கேட்ட மருத்துவமனை முதல்வர், இருவரும் தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து 2.5 லட்சம் ரூபாய்க்கு 100 மின்விசிறிகள் வாங்கி வந்திருப்பது தெரியவந்தது.
தம்பதிகளின் நிலை குறித்து அறிந்த டீன் வருத்தமடைந்து, மிகவும் சிரமப்பட்டு இவ்வளவு மின்விசிறிகள் வழங்க வேண்டாம் . பாதி மின் விசிறிகளை திரும்பக் கொடுத்து உங்களுடைய நகையை மீட்டு கொள்ளுங்கள் என்று டீன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த தம்பதிகள் மின்விசிறிகளை கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்கே இது பயன்படுத்த வேண்டுமென்று கறாராக கூறி விட்டனர்.
அதன்பின் மருத்துவமனை டீன் ரவீந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அவரும் இவ்வளவு மின்விசிறிகளை சிரமத்துக்கு இடையே தரவேண்டாம் என்று ஆட்சியரும் கூறியிருக்கிறார்.
ஆனால் தங்களின் முடிவில் விடாப்பிடியாக இருந்த தம்பதிகளால் மருத்துவமனை டீன் மின்விசிறிகளை பெற்று கொண்டார்.
அதோடு மின்விசிறிகள் வழங்கியதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய பெயர் விபரம் எதுவும் வெளியே சொல்லவேண்டாம் எனவும் அன்புக் கட்டளையிட்டு சென்றுள்ளனர்.