மஹா சிவராத்திரியில் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு போன பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. விருதாச்சலத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயம். தமிழகத்தின் மிக முக்கிய சிவ தலங்களுள் ஒன்றாக அறியப்படும் இந்த ஆலயத்தின் கோபுர கலசங்கள் திருடப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விருத்தகிரீஸ்வரர் கோவில்
சுமார் 1500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் ஆலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள கல்வெட்டுகளில் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அவன் மனைவி செம்பியன் மாதேவி, உத்தம சோழன், இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழன் ஆகிய முக்கிய சோழ அரசர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1008 சிவ தலங்களுள் ஒன்றாக கருதப்படும் இந்தக் கோவிலின் சிறப்புகளை தேவாரப் பாடல் 220 அழகாக எடுத்துரைக்கிறது.
களவுபோன கோபுரங்கள்
இன்று மஹா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்த திருக்கோவிலின் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் இருந்த 3 கலசங்கள் திருடப்பட்டு உள்ளன. இந்த கோபுரங்கள் 3 அடி உயரம் கொண்டவை என்றும் இவற்றின் மீது 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு இருந்ததாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குடமுழுக்கு
ஊழிக் காலத்தில் உலகமே அழிவை சந்தித்த நிலையில், இந்தக் கோவில் மட்டும் சிதைவடையாமல் இருந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. அப்படி, பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலின் கும்பாபிஷேக பெருவிழா கடந்த 6 ஆம் தேதி விமர்சியாக நடைபெற்றது.
கடைசியாக 2002 ஆம் ஆண்டு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு இப்போது தான் இந்த பெரும் விழா நடைபெற்றது. இதில், ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மஹா சிவராத்திரி
இந்து சமய மக்களின் மிக முக்கிய தினங்களுள் ஒன்றான மஹா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாக மஹா சிவராத்திரியின் போது இரவு முழுவதும் சிவன் கோவில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும். விருத்தாச்சலத்தில் உள்ள இந்த விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திலும் மஹா சிவராத்திரி விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், மஹா சிவராத்திரி அன்று இந்தக் கோவிலின் கலசங்கள் களவு போயிருப்பது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.