'கடும் தட்டுப்பாடு'!.. 800 கிலோ மாட்டு சாணம் திருட்டு!.. பின்னணி யார்?.. வழக்குப் பதிவு செய்து காவல்துறை தேடுதல் வேட்டை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு கிராமத்திலிருந்து மட்டும் சுமார் 800 கிலோ அளவிலான மாட்டு சாணம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது முதல் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் மற்றும் மாடு வளர்பவர்களுக்கு ஏற்ற வகையில் கோதன் நியாய் திட்டத்தை அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு அங்கு மாட்டுச் சாணம் மிகவும் உயர் மதிப்பு பெற்றது.
ஏனெனில், இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ மாட்டுச் சாணத்தை அரசு 2 ரூபாய்க்கு பெற்று வருகிறது. இதன் காரணமாக அரசுக்கு மாட்டுச் சாணம் விற்க பலர் போட்டி போட்டு கொண்டு முந்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு கிராமத்திலிருந்து மட்டும் சுமார் 800 கிலோ மாட்டுச் சாணம் திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றின் தலைவர் கம்ஹான் சிங் கன்வார் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அதன்படி கடந்த 8 மற்றும் 9ம் தேதி அந்த கிராமத்திலிருந்து சுமார் 800 கிலோ அளவிற்கு மாட்டுச் சாணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சாணம் முழுவதும் அவர்களுடைய மாடு வளர்க்கும் கௌதான் சமூகத்தினருடையது என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த திருட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராமத்திலும் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். மாட்டுச் சாணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி சத்தீஸ்கர் அரசு கோதன் நியாய் திட்டம் என்ற புதிய திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் மாட்டுச் சாணத்தை அரசு ஒரு கிலோவிற்கு 2 ரூபாய் என கொடுத்து வாங்குகிறது. அவ்வாறு வாங்கிய மாட்டுச் சாணத்தை வைத்து மண்புழு உரம், அகர்பத்தி, ஊதுபத்தி ஆகியவை தயாரிக்கிறது. அப்படி தயாரிக்கும் பொருட்களை மீண்டும் சந்தையில் விற்கிறது. ஒரு கிலோ மண்புழு உரத்தை அரசு 8 ரூபாய்க்கு விற்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராம மக்களின் வருவாயை அதிகரிப்பது மட்டுமின்றி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த முயற்சி செய்து வருகிறது. மாட்டுச் சாணத்தை மாடுகள் வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் 2,700க்கும் மேற்பட்ட கிராமங்களை அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது. மேலும், இந்த வருடத்தின் இறுதிக்குள் 5000 கௌதான் கிராமங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் மாடு வளர்ப்பவர்கள் மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கும் நல்ல தரமான இயற்கை உரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாயிகள் இயற்கை உரங்களை வைத்து விவசாயம் செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
