காற்றில் பறந்து வந்த ‘மாஞ்சாநூல்’.. டூட்டி முடிந்து பைக்கில் போன காவலருக்கு நேர்ந்த பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 25, 2020 08:30 AM

வேலூரில் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து காவலர் படுயாமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vellore police in injured because of manja slits his neck

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (36). இவர் வேலூர் மத்திய சிறையில் தலைமை சிறைக் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பணிமுடிந்து வேலூர் அண்ணாசாலை வழியாக பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார். ஊரீஸ் கல்லூரி அருகே சென்றபோது காற்றில் பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல் ஒன்று காவலரின் கழுத்தில் சிக்கியது. இதனால் கழுத்து அறுபட்டு பைக்கில் இருந்து விழுந்து அவர் வலியில் துடித்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் உடனே வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் காவலர் சுரேஷ்பாபுவை மீட்டு சி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது காவலர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாஞ்சா நூலில் பட்டம் விட்ட நபர்களை தீவிரமாக தேடிவருவதாகவும், மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஊடங்கு அமலில் உள்ளதால் சிலர் பொழுது போக்கிற்காக வீட்டு மாடியிலிருந்து பட்டம் விடுகின்றனர். அதில் ஒரு சிலர் சாதாரண நூல்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து கண்ணாடி துகள்களை அரைத்து மாஞ்சா போடப்பட்ட நைலான் நூல்களை பயன்படுத்துகின்றனர். இது சட்டப்படி குற்றம். மாஞ்சா நூலில் பட்டம் விடும் நபர்கள் மீது குற்ற வழக்கு பதியப்படும். சில நேரங்களில் பட்டம் அறுந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கழுத்தில் சிக்கி அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. மாஞ்சா நூல் பட்டம் விடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 0416-2258532, 0416-2256966, 0416-2256802 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு எஸ்.பி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் பெற்றோருடன் பைக்கில் சென்ற குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.