‘மாஸ்டர்’ கொண்டாட்டத்தில், விஜய் ரசிகர்களிடையே ‘கொரோனா விழிப்புணர்வு’.. ‘டிராஃபிக்’ இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் அண்மையில் நடந்த மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவை விஜய் மக்கள் இயக்கத்தின் குளித்தலை ஒன்றியம் சார்பாக நேரலையில் விஜய் ரசிகர்கள் ஒளிபரப்பு செய்தனர்.

அந்த மேடையில் ஏறிய குளித்தலை டிராஃபிக் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் டிராஃபிக் சம்பந்தமான விழிப்புணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்திய சம்பவம் அசர வைத்துள்ளது. விஜய் பேசுவதை கேட்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் அமர்ந்திருந்த சூழலில், அந்த மேடையில் ஏறி அதே திரையில் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் மற்றும் காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வு குறும்படம் உள்ளிட்டவற்றை திரையிட்ட கார்த்திகேயன், அந்த மேடையை பயன்படுத்திய விதத்தை மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன், ‘விஜய் பேசுவதைக் கேட்பதற்காக குளித்தலையில் திரைகட்ட அனுமதி கேட்ட அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவ்விழாவை நடத்துவதாக உத்திரவாதம் கொடுத்தார்கள். எனினும் வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தச் சொல்லி விஜய் மக்கள் இயக்க குளித்தளை ஒன்றியத் தலைவர் கேட்டுக்கொண்டார். அதனால் ஹெல்மெட் உள்ளிட்ட போக்குவரத்து துறை சார்ந்த விழிப்புணர்வையும் காவல் செயலியின் பயன்பாட்டை குறித்த விழிப்புணர்வையும் இளைஞர்களுக்கு ஏற்படுத்தினோம்’ என்று தெரிவித்தார்.
