'தமிழகத்தை நோக்கி வரும் ஃபானி புயல்.. ' 2 நாட்கள் ரெட் அலர்ட்'?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 25, 2019 12:37 PM
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதை அடுத்து ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல இடங்களிலும், கோடை மழை ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. சில தென் மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை மழை இல்லை. ஆனால் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது. தொடர்ந்து 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். அந்த புயலுக்கு ஃபனி (FANI) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் வரும் 30-ம் தேதி தமிழகம் - ஆந்திரா கடற்கரையை ஒட்டி உள்ள பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது 90 - 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும், மீனவர்கள் இன்று முதல் வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை முதல் நாகப்பட்டினம் வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஃபனி புயல் ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 60 சதவீதம் மட்டுமே புயல் மற்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனினும், புயல் சென்னையை ஒட்டி கரையை கடந்தால், தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை தீர்ந்து ஏரி, குளங்கள் நிரம்பி வழியும் அளவிற்கு கனமழை பெய்யும் என்று வெதர்மேன் கூறியுள்ளார். பெரும் புயலாக மாறினால், மீண்டும் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை மையம் கொடுத்துள்ளது.