ரொம்ப நேரமா வீட்டுல இருந்து யாருமே வெளிய வரல.. சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த பக்கத்துவீட்டு பெண்.. காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மின்சாரம் தாக்கிய கணவனை காப்பாற்ற சென்ற மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம் (வயது 30). இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி ஹேமா (வயது 25). நிவாஸ் ரத்தினம், நேற்று காலை தனது வீட்டில் புதிய மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது நிவாஸ் ரத்தினம் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனால் நிவாஸ் ரத்தினம் துடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி ஹேமா, கணவரை காப்பாற்ற தனது 2 வயது மகள் நிகன்யாவுடன் வந்து நிவாஸ் ரத்தினத்தை பிடித்துள்ளார். அதனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மூவரும் மின்சாரம் தாக்கி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த நிலையில் மாலை வரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அருகில் வசிக்கும் பெண் ஒருவர் நிவாஸ் ரத்தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் சமையலறை அருகே கணவன், மனைவி, குழந்தை என மூவரும் அசைவற்று கிடந்துள்ளனர். உடனே அவர்களை தட்டி எழுப்ப முயன்றுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது.
உடனே சுதாரித்த அவர் சட்டென்று விலகி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் மின் இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டு பரிசோதித்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மூன்று பேரின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
