கணவன் மது குடிப்பதை தடுக்க கர்ப்பிணி கையிலெடுத்த விபரீத செயல்.. கடைசியில் அதுவே வினையாக மாறிய சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமது குடிக்க பணம் தர மறுத்த கர்ப்பிணி மனைவிக்கு கணவனால் நடந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பழைய பையப்பனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் பாபு (வயது 37). இவருடைய மனைவி மீனா (வயது 24). மீனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் கணவர் திடீரென இறந்து விட்டார். இதனை அடுத்து பாபுவை இரண்டாவதாக மீனா திருமணம் செய்துள்ளார். 3 பெண் குழந்தைகளில் 2 பேர் மீனாவின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
மது குடிக்க பணம் கேட்டு தகராறு
மீனா அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். பாபு, கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். தற்போது மீனா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். பாபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் தினமும் மது அருந்திவிட்டு மீனாவுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மது அருந்த மீனாவிடம் பணம் கேட்டு பாபு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அலறல் சத்தம்
இந்த நிலையில், நேற்று முன்தினம் மது குடிக்க மீனாவிடம் பணம் கேட்டு பாபு சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது பணம் தர மறுத்து வீட்டில் இருந்த டீசலை எடுத்து தனது உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக மீனா மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் டீசலை பிடுங்கி, மீனா மீது ஊற்றி பாபு தீவைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் உடலில் தீப்பிடித்து அலறியுள்ளார். மீனாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மீனா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவன் கைது
இதனிடையே தப்பிக்க முயன்ற கணவன் பாபு, கீழே விழுந்ததில் காலில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், மது அருந்த பணம் கேட்ட தகராறில், தனது மனைவி மீனா மீது பாபு தீ வைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பாபுவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
