3 லட்சம் 'காசு' போட்டு... 6 மாசம் 'கஷ்டப்பட்டு' இருக்கேன்... பொதுமக்களின் செயலால் 'கதறியழுத' மனிதர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கிழுமத்தூர் என்னும் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 350 ஏக்கர் ஏரியொன்று உள்ளது. ஆண்டுதோறும் தண்ணீர் வற்றும்போது இந்த ஏரியை மீன்பிடிக்க குத்தகைக்கு விடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் ரூபாய் 3 லட்சம் பணம் செலுத்தி குத்தகைக்கு எடுத்திருந்தார். கடந்த 6 மாத காலமாக இந்த ஏரியில் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகளை விட்டு அவர் வளர்த்து வந்தார். ஒவ்வொரு மீனும் 1 கிலோ எடையளவில் இருந்தது. இதைப்பார்த்த மணிவேல் வருகின்ற 6-ம் தேதி மீன் பிடிக்கலாம் என காத்திருந்தார்.
இதற்கிடையில் இந்த ஏரியில் மீன் இருக்கிறது என கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அக்கம், பக்கம் உள்ள கிராமத்தினருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். இதையடுத்து சுமார் 25 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நேற்று அதிகாலையில் ஏரியின் அருகே திரண்டனர். காவலுக்கு இருந்த மணிவேல் தடுத்தும் அவர்கள் கேளாமல் மீன்பிடிக்க ஏரிக்குள் இறங்கினர். மணிவேல் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியழுதும் கூட யாரும் கேட்பதாக இல்லை.
இந்த சூழலுக்கு நடுவில் கரையில் நின்றிருந்த மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ தீவைக்க அந்த இடமே கலவரமானது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மீன் பிடிக்க வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அவர்கள் அனைவரும் சுமார் 10 கிலோ மீனை பிடித்து சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து குத்தகைதாரர் மணிவேல் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை காவல் நிலையத்தில் வந்து புகார் கொடுக்கும்படி சொல்லி சென்றனர். ஆனால்எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தன்னை யாரோ தாக்கி விட்டதாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.