'இளநீர்' திருட்டு, 2 வழக்குகள்... தலை துண்டித்து 'கொலை' செய்யப்பட்ட.... 'கல்லூரி' மாணவர் வழக்கில் புதிய தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(21). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு வாக்கிங் செல்வதாக சொல்லிச்சென்ற சத்தியமூர்த்தி இரவு 9 மணி ஆகியும் வரவில்லை. இதற்கிடையில் அங்கிருந்த காட்டுப்பகுதி ஒன்றில் சத்தியமூர்த்தி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சத்தியமூர்த்தியின் தலையை தேடிப்பார்த்தனர். ஆனால் 3 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் இருட்டாக இருந்ததால் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மறுநாள் காலை அவரது தலையை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பக்கத்து கிராமம் ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து இளநீர் திருடிய சத்தியமூர்த்தி அதற்காக மன்னிப்பு கேட்க மறுத்து விட்டதாகவும், இரண்டு தரப்பினருக்கு இடையிலான மோதலால் இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மன்னிப்பு கேட்க சொன்னபோது சாதிப்பெயரை சொல்லி சத்தியமூர்த்தி திட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த கொலை விவகாரம் தொடர்பாக 2 பேரை கைது செய்திருக்கும் போலீசார், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இதுதவிர இறந்து போன சத்யமூர்த்தி மேல் ஆத்தூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட கிராமத்தில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.