கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழைய கட்டிடத்தை இடிக்கும்போது தங்கக்கட்டி கிடைத்ததாக சென்னை வியாபாரியை ஏமாற்றிய கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை நீலாங்கரை வைத்தியலிங்கம் சாலை 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவர் சோலுங்கநல்லூரில் ஆயில் கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு கட்டிட வேலை செய்யும் வெங்கடேசன் என்பவர் அடிக்கடி ஆயில் வாங்க வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த சந்திப்புகளில் நண்பர்கள் போல பழக ஆரம்பித்துள்ளனர்.
இந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் கஷ்டப்படுவதாக பொன்னுரங்கத்திடம் வெங்கடேசன் கூறியுள்ளார். பின்னர் தன்னிடம் ஒரு தங்கக்கட்டி இருப்பதாகவும், அதை யாரிடமாவது விற்றுக்கொடுக்க முடியுமா என பொன்னுரங்கத்திடம் வெங்கடேசன் உதவி கேட்டுள்ளார். அதற்கு பொன்னுரங்கமும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அப்போது ‘இந்த தங்கக்கட்டி உங்களுக்கு எப்படி கிடைத்தது’ பொன்னுரங்கம் கேட்டுள்ளார். அதற்கு திருச்சியில் பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும்போது தங்கக்கட்டி கிடைத்ததாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பொன்னுரங்கம் தங்கக்கட்டியை எடை போட்டபோது 450 கிராம் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் பொன்னுரங்கத்திடம், ‘நீங்களே இந்த தங்க்கட்டியை வாங்கிக்கொண்டு பணம் கொடுங்கள்’ என வெங்கடேசன் கூறியுள்ளார்.
அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என பொன்னுரங்கம் தெரிவித்துள்ளார். அப்போது தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், அதனால் தங்கக்கட்டிக்கு பாதி விலை மட்டும் கொடுங்கள் என ஆசையை தூண்டியுள்ளார். அதனால் மனம் மாறிய பொன்னுரங்கம் தங்கக்கட்டியை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தங்கக்கட்டியின் விலை 5 லட்சம் என பேசி முடித்து முதல் தவணையாக 3 லட்சம் ரூபாயை வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியிடம் கொடுத்துள்ளார். தங்கக்கட்டியை குறைந்த விலைக்கு வாங்கிய மகிழ்ச்சியில் பொன்னுரங்கம் இருந்துள்ளார். இதனை அடுத்து மார்ச் மாதம் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அப்போது தங்கக்கட்டியையும் உடன் எடுத்து சென்ற பொன்னுரங்கம், அங்கு தனக்கு தெரிந்த நகைக்கடையில் சோதித்து பார்த்துள்ளார். அப்போது பொன்னுரங்கத்துக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது தங்கக்கட்டி இல்லை என்றும், தங்க முலாம் பூசிய பித்தளை என்றும் தெரியவந்தது. உடனே வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் இருந்ததால், உடனே அவரால் சென்னைக்கு வரமுடியவில்லை. இதனை அடுத்து கடந்த 27ம் தேதி சென்னை வந்த பொன்னுரங்கம் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தங்கக்கட்டி எனக் கூறி தன்னை ஏமாற்றிய வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி மீது புகார் அளித்துள்ளார். ‘அருள்’ படத்தில் வடிவேலுவை தங்க முலாம் பூசிய செங்கலை கொடுத்து சிங்கமுத்து ஏமாற்றியதுபோல பித்தளையில் தங்க முலாம் பூசி ஏமாற்றிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
