'டிரம்ப்க்கு தண்ணி காட்டிய ஆன்டிஃபா பாய்ஸ்'... 'யார் இந்த ஆன்டிஃபா குரூப்'?... அரண்டு போன அமெரிக்கா!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை கொரோனா ஒரு பக்கம் மிரட்டுகிறது என்றால், தற்போது ஆன்டிஃபா என்ற அமைப்பைப் பார்த்து அமெரிக்கா ஆடிப் போயுள்ளது.

கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்டதையடுத்து , அமெரிக்காவில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. வாஷிங்டன், நியூயார்க், சான்பிரான்ஸிஸ்கோ, டெட்ராயிட், லாஸ்ஏஞ்சல்ஸ், சிகாகோ உள்ளிட்ட பெரு நகரங்கள் வன்முறையின் முக்கிய களமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் அங்கு நடக்கும் வன்முறைக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆன்டிஃபா( ANTIFA) என்ற அமைப்பு தான் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அமைப்பு குறித்து சற்று திரும்பிப் பார்த்தால், சில சுவாரசியமான விஷயங்கள் தென்படும். தொழிலாளர்கள், இடது சாரி சிந்தனையாளர்கள், அரசுக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் ஒருங்கிணைந்து இந்த அமைப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உலகின் பல நாடுகளிலும் இந்த அமைப்பானது இயங்கினாலும், இந்த அமைப்புக்கு என்று தனியாக ஒரு தலைவர் கிடையாது. இதற்கிடையே கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் பழமைவாத தலைவர் ஒருவர் நடத்திய மாநாட்டில் ஆன்டிஃபா குழுவினர் புகுந்து கலாட்டா செய்தனர்.
அதன்பிறகு அந்த அமைப்பின் பெயர் அமெரிக்காவில் அதிகமாக அடிபடத் தொடங்கியது. இந்த அமைப்பை இணைக்கும் முக்கிய புள்ளியாக இருப்பது சமூகவலைத்தளங்கள். கருப்பு டி- சர்ட், கருப்பு பேண்ட் அணிந்து போராடுவது இவர்களின் அடையாளம். ஒரு நகரத்தில் தங்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினால், பிற நகரங்களிலிருந்து இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று போராட்டத்தில் பங்கேற்பார்கள்.
இதனிடையே ஜார்ஜ் பிளாயிடின் மரணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் கிட்டத்தட்ட வன்முறை வெடித்திருக்கிறது. இதற்குப் பின்னால் ஆன்டிஃபா அமைப்பு தான் இருக்கிறது எனக் கூறும் டிரம்ப், அந்த அமைப்பைத் தடை செய்யத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
