'ஹலோ... யாரும்மா நீங்க?.. இது போலீஸ் ஸ்டேஷன்'!.. 'என்னைய பாத்தா யாருனு கேட்ட'!?.. மப்டி உடையில் வந்த பெண் துணை கமிஷனர்!.. பாவம் அந்த பெண் போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிவில் உடையில் இருந்த தன்னை அடையாளம் தெரியாத காரணத்தினால், பெண் கான்ஸ்டபிளை 2 நாள் டிராபிக்குக்கு மாற்றி 12 மணி நேரம் வேலை வாங்கிய கூடுதல் பெண் துணை கமிஷனருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொச்சி நகர சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக ஐஸ்வர்யா டோங்ரே என்பவர் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பதவியேற்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்துக்கு ஆய்வு செய்வதற்காக ஐஸ்வர்யா சென்றார். அப்போது, போலீஸ் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்துள்ளார். முகத்தில் மாஸ்க்கும் அணிந்துள்ளார்.
அதனால், உயரதிகாரியை அடையாளம் காண முடியாமல் காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், அவரை தடுத்து என்ன ஏதுவென்று விசாரித்துள்ளார்.
விசாரித்ததில் தன் உயரதிகாரி என்பதை தெரிந்து கொண்டு உடனடியாக துணை கமிஷனரை போலீஸ் நிலையத்துக்குள்ளும் அனுமதித்து விட்டார். ஆனாலும், கோபமடைந்த துணை கமிஷனர் ஐஸ்வர்யா, 'என்னை அடையாளம் தெரியாமல் எப்படி தடுக்கலாம்' என்று கூறி அந்த பெண் அதிகாரியிடத்தில் விளக்கம் கேட்டுள்ளார்.
பெண் போலீஸ் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கம் அளித்தும் ஏற்றுக் கொள்ளாத துணை கமிஷனர் ஐஸ்வர்யா, கொச்சியில் கடும் டிரைபிக் உள்ள உயர்நீதிமன்ற பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட அந்த பெண் போலீசுக்கு உத்தரவிட்டார்.
பொதுவாக, கேரளாவில் டிராபிக் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு 6 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுபவார்கள். ஆனால், அந்த பெண் போலீஸ் அதிகாரியை 12 மணி நேரம் பணியில் இருக்க துணை கமிஷனர் உத்தரவிட்டிருந்தாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் கேரளா போலீஸ் துறையில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. பொதுவாகவே, கேரள போலீஸ் நிலையங்களில் யாராக இருந்தாலும் உரிய விசாரிப்புக்கு பிறகே உள்ளே அனுப்பப்படுவார்கள் என்று போலீஸார் கூறுகின்றனர்.
ஆனால், உயரதிகாரியின் வாகனத்தை கூட அந்த பெண் போலீஸால் அடையாளம் காண முடியவில்லையா? என்று துணை கமிஷனர் ஐஸ்வர்யா கேள்வி எழுப்புகிறார். அதேவேளையில், பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் பாதுகாப்புக்கு இருந்த பகுதியிலிருந்து வாகனங்கள் பார்க் செய்யப்படும் இடத்தை காண முடியாது என்றும் சொல்லப்படுகிறது.
கேரளாவில் தற்போது, பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளிலேயே இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஐஸ்வர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக திருவனந்தபுரத்தில் ஐஸ்வர்யா துணை கமிஷனராக பணியாற்றினார்.
இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் மாவட்ட கேரள போலீஸ் சங்க நிர்வாகி நிஷாத் கூறுகையில், மப்டி உடையில் இருந்தாலும் உயரதிகாரிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்பது விதிதான். ஆனாலும், கொரோனா காரணமாக முகத்தில் மாஸ்க் அணிவதால் அந்த போலீஸால் அடையாளம் காண முடியவில்லை.
இத்தகையை சூழலை கருத்தில் கொண்டு துணை கமிஷனர் ஐஸ்வர்யா, தண்டனை அளிப்பதை தவிர்த்திருக்கலாம் என்றார். கேரள உயர் போலீஸ் அதிகாரிகள் ஐஸ்வர்யா டோங்ரே தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கேரள உள்துறை அமைச்சகம் போலீஸ் துறையிடத்தில் விளக்கம் கேட்டுள்ளது.

மற்ற செய்திகள்
