'தூங்குறப்போ டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார்...' 'போலீசாரை டென்ஷன் ஆக்கிய திருடன்...' 'யார்னு உடனே கண்டுபிடிச்சாகணும்...' - துப்பு துலக்க உதவிய 'அந்த' சிசிடிவி வீடியோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவலரிடமிருந்து போனை திருடிய திருடர்கள், தூங்கும் போது தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறி மாட்டிக்கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிந்து வருபவர் காவலர் தினேஷ். இவர் கடந்த 9-ந் தேதி கீழ்ப்பாக்கம் பர்ணபி சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து காவலர் தினேஷ் புகார் அளித்ததின் பெயரில், கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், காவலர் தினேஷிடமிருந்து பறித்து செல்லப்பட்ட செல்போனுக்கு இரவில் போன் செய்துள்ளார். அப்போது போனை எடுத்த திருடர்களில் ஒருவரான ராஜேஷ், 'தூங்கும் போது தொந்தரவு பண்ணாதீங்க சார்... கொஞ்சம் நேரம் தூங்கவிடுங்க' என கூறி போனை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை வட்டாரம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, திருடிய செல்போனை பர்மாபஜாரில் வியாபாரி ஒருவரிடம் விற்பனை செய்ததை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து ராஜேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் விரைந்து சென்று ராஜேசையும், கூட்டாளியான அரவிந்தையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பர்மாபஜாரில் விற்பனை செய்யப்பட்ட செல்போன் மீட்கப்பட்டது.
காவலரிடம் செல்போனை திருடுவதற்கு முன், கீழ்ப்பாக்கத்தில் போலீஸ்காரரிடம் செல்போனை பறித்துவிட்டு சென்ற ராஜேஷ், சேப்பாக்கம் பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ள வீடியோ காட்சியை வைத்து போலீசார் துப்பு துலக்க உதவியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
