"18 வயசு ஆகலையா?.. அப்போ செல்போனை தொட கூடாது".. கிராமத்தின் விநோத கட்டுப்பாடு.. அபராதம் வேற போடுறாங்களாம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் மொபைல் போன்களை உபயோகிக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் தகவல்தொழில்நுட்ப வசதிகளால் நினைத்த நேரத்தில் நம்மால் எதையும் செய்துவிட முடிகிறது. மொபைல் போன்களின் புழக்கம் சமீப ஆண்டுகளில் கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. செல்போன்களினால் பல நன்மைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அளவுக்கு மீறினால் அனைத்துமே ஆபத்துதான் இல்லையா? செல்போனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனை நிரூபிக்கும் விதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று 18 வயது நிரம்பாதவர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு விதர்பா பகுதியில் யவத்மால் மாவட்டத்தில் உள்ள கிராமம் பான்சி. இந்த கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் கூட்டம் ஒன்று நடைபெற்றதாக தெரிகிறது. அதில், கிராமத்தில் வசித்துவரும் குழந்தைகளிடையே மொபைல் பயன்பாடு அதிகரித்து வருவதையும் அதை கட்டுப்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள 18 வயது நிரம்பாதவர்கள் செல்போன்களை பயன்படுத்துவதை தடை செய்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவிற்கு கிராம மக்களும் ஒப்புதல் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து, கிராம நிர்வாக தலைவர் கஜானன் டேல், பான்சி கிராமத்தில் 18 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும், செல்போன் பயன்பாட்டில் ஆழ்ந்திருக்கும் குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செல்போன் உபயோகிக்கும் 18வயது நிரம்பாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பேசிய பான்சி கிராமத்தின் நிர்வாக தலைவர் கஜானன் டேல்,"இந்த தீர்மானத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த பிரச்சனைகளை கவுன்சிலிங் மூலம் அகற்றுவோம். தீர்மானத்தை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். ஆனால் கிராம மக்கள் இந்த முடிவுக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில், நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவோம், ஆனாலும் தொடர்ந்து செல்போன்களை உபயோகித்தால், நாங்கள் அபராதம் விதிப்போம்" என்றார்.
கிராமத்தில் உள்ள குழந்தைகளை நல்வழிப்படுத்தவே இந்த நடவடிக்கையில் இயங்கியுள்ளதாகவும், அபராத தொகை எவ்வளவு என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கஜானன் தெரிவித்திருக்கிறார்.
Also Read | "காசியும் தமிழகமும் ஒன்றுதான்".. தமிழில் ட்வீட் செய்த யோகி ஆதித்யநாத்.. பின்னணி என்ன?