"ஈ தொல்லையால் அல்லல்படுறோம்.. ஒரு டீ கூட குடிக்க முடியல".. தமிழ்நாட்டுல 'ஈ'ப்படி ஒரு கிராமமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் உள்ள கிராம மக்கள், பல ஆண்டுகளாக ஈக்கள் காரணமாக சந்தித்து வரும் பிரச்சனைகள், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே திம்மநாயக்கன்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வரை வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக இந்த கிராமம் முழுவதும் ஈ தொல்லைகள் காரணமாக, மக்கள் கடும் இன்னல்ககளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
சாப்பிடும் போது உணவு பொருட்களில் கூட ஈக்கள் விழுவதால், அதனை உண்ணும் மக்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அது மட்டுமில்லாமல், வீட்டில் வைத்திருக்கும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொடங்கி, அனைத்து இடங்களிலும் கூட்டம் கூட்டமாக ஈக்கள் மொய்த்து கொண்டு வருவதால், அதனை பயன்படுத்தவும் முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், Behindwoods சேனலில் இருந்து, அந்த ஊருக்கு பிரத்யேகமாக சென்று இதற்கான காரணம் குறித்து அப்பகுதியிலுள்ள மக்களிடம் கேட்டறிந்தனர். அப்போது, கடந்த ஐந்து வருடங்களாக ஈ தொல்லை இருப்பதாகவும், சாப்பாடை எடுத்து வைத்தால், உடனே ஈக்கூட்டம் வந்து மொய்த்து விடும் என்றும் ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, திம்மநாயக்கன்பாளையம் கிராமத்திற்கு புதிய வீடு வைத்து குடிபெயர்ந்த அனிதா என்பவர் பேசுகையில், "எங்களின் வீடு கிரஹ பிரவேசம் நடந்த தினத்தில் கூட நிறைய ஈக்கள் தான் இங்கே இருந்தது. இதன் காரணமாக, அன்றைய தினத்தில் நிறைய பேர் உணவு அருந்தாமல் போய் விட்டனர். புதிய வீடு வைத்து, முதல் 4 நாட்கள் நாங்கள் யாரும் சாப்பிடவே இல்லை.
இதன் பின்னர், கதவு மற்றும் ஜன்னல் என அனைத்து இடங்களிலும் வலை போட்டு விட்டோம். இத்தனை ஈக்கள் வருவதால், அனைவருக்கும் உடல் உபாதைகள் கூட ஏற்படும். இப்படி இருப்பதால், எனது பெற்றோர்களை கூட இங்கே வர வேண்டாம் என கூறி விட்டேன். எனது உறவினர்களின் குழந்தைகளைக் கூட இங்கே கொண்டு வருவதில்லை" என தெரிவித்தார்.
அதே போல, அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் பேசுகையில், "மாதா மாதம் பணம் கட்டி இங்கே இடம் வாங்கி வீடு வைத்தோம். ஆனால், இங்கு ஈ தொல்லை அதிகமாக உள்ளது. பல முயற்சிகள் செய்தும் பலன் கிடைக்கவில்லை. நான் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்களும் அவதிப்பட்டு வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் இருக்கும் கோழிப் பண்ணைகள் தான், ஈக்கள் இந்த அளவுக்கு அதிகமாக இருப்பதற்கான காரணம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கோழியின் கழிவுகள் மூலம், ஈக்கள் அதிகமானதாக கூறப்படும் நிலையில், ஒரு டீ குடிக்கக் கூட திம்மநாயக்கன்பாளையம் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
