பேய் இருந்தா கூட பரவால்ல .. இந்த பிரச்சனையா.? - தெறித்து ஓடும் மணப்பெண்கள்.. திணறும் மாப்பிள்ளைகள்.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு கிராமத்தின் பெயரை கேட்டாலே ஆண்களுக்கு யாரும் பெண் தர மறுக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் உள்ள தாண்டிச்சி பாரி என்ற கிராமத்துக்கு புதிதாக பெண் ஒருவர் திருமணமாகி வந்துள்ளார். இதனை அடுத்து இரண்டாவது நாளில் பக்கத்துவீட்டு பெண்ணுடன் குடிநீர் எடுத்து வரச் சென்றுள்ளார். தினமும் குடிநீர் எடுத்து வருவது எவ்வளவு சிரமமான வேலையாக இருக்கப் போகிறது என்று சிந்தித்தவர், குடத்தை அப்படியே போட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போனவர்தான், இப்போது வரை திரும்பி வரவேயில்லை.
இப்படி பல பெண்கள் திருமணமான சில நாட்களிலேயே இந்த கிராமத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அதற்கு காரணம், இந்தக் கிராமத்தில் தாண்டவமாடும் கொடுமையான தண்ணீர்ப் பிரச்சினைதான். நாசிக் நகரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் உள்ளது. சுமார் 300 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை கொடிகட்டிப் பறக்கிறது. அதிலும் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் இந்த பிரச்சனை உச்சம் பெறுகிறது
தண்ணீருக்காக குன்றின் சரிவுப் பாதையில் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கீழே இறங்க வேண்டும். அங்கு குன்றின் அடிவாரத்தில் கொஞ்சமாக தண்ணீர் கசிந்து வருகிறது. இதை மணிக்கணக்கில் சிறிய பாத்திரத்தில் சிறிது சிறிதாய் முகர்ந்து குடத்தில் ஊற்றி நிரப்ப வேண்டும். பின்னர் குடத்தை தலையில் வைத்து குன்றுப் பாதையில் கவனமாக அடிவைத்து மேலே ஏற வேண்டும்.
இங்குள்ள ஒவ்வொரு குடும்பப் பெண்ணின் பிரதான வேலையே தண்ணீர் எடுத்துவருவதுதான். தினமும் 2 முறை இந்த தண்ணீர்ப் பயணம் நடக்கிறது. அதிலும் முதல் பயணம் அதிகாலை 4 மணிக்கே தொடங்கிவிடுகிறது. சில சமயங்களில் ஒரு குடம் நிரம்புவதற்கே 3 மணி நேரம் வரை ஆகிவிடும் என்பதால், மாலை வீடு திரும்பும்போது இருட்டிவிடும். அப்போது வனவிலங்குகள் குறித்த பயத்துடனே குடத்தைச் சுமந்துவர வேண்டும்.
இப்படி கடுமையான தண்ணீர்ப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கிராம ஆண்களுக்கு பிற கிராமத்தினர் பெண் கொடுக்க முன்வருவதில்லை. உற்சாகமாக திருமண பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பவர்கள், மாப்பிள்ளை தாண்டிச்சி பாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்ததும் அப்படியே பின் வாங்கி விடுகின்றனர். விவரம் தெரியாமல் இந்த கிராமத்துக்கு மணமாகிவரும் பெண்களும், தங்களது அன்றாட அவஸ்தையால் அதிக காலம் புகுந்த வீட்டில் நீடிப்பதில்லை. திருமணமாகி சில நாட்களிலேயே கணவரைப் பிரிந்து சென்ற பெண்கள் ஏராளமாக உள்ளனர். பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றும், இங்கு நிலவும் தண்ணீர்ப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வுதான் காணவில்லை என அக்கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
