"ஓட்டு போடுறோம்.. ஆனா யாரும் உள்ள வரக்கூடாது".. அரசியல் கட்சியினருக்கு தடை விதித்துள்ள கிராமம்.. பல வருஷமா இப்படித்தானாம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று பல வருடங்களாக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய தடை விதித்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆளும் பாஜக ஏழாவது முறையாக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால், பல வருடங்களாகவே குஜராத்தில் உள்ள ராஜ் சமாதியாலா கிராமத்தினர் அரசியல் கட்சியினரை தங்களது கிராமத்திற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துவருகின்றனர். ராஜ்கோட்டில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது ராஜ் சமாதியாலா கிராமம். தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சியினர் தங்களது கிராமத்திற்குள் நுழைய இம்மக்கள் அனுமதிப்பது இல்லை. அதே வேளையில் ஒவ்வொரு தேர்தலிலும் இங்குள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது வாக்கை செலுத்திவிடுகின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம அபிவிருத்தி குழு (VDC) இந்த கிராமத்தில் பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அவற்றுள் ஒன்று வாக்களிக்காமல் இருப்பது. தேர்தல் சமயத்தில் வாக்கு செலுத்த முடியாதவர்கள் அதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டுமாம். இல்லையென்றால் அதற்கு 51 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்கிறார் இந்த கிராமத்தின் நிர்வாக தலைவர்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"கிராமத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்யக்கூடாது என்ற விதி 1983ல் இருந்து நடைமுறையில் இருக்கிறது. இங்கு எந்த கட்சியும் பிரசாரம் செய்யக்கூடாது. ராஜ் சமாதியாலா கிராமத்தில் பிரச்சாரம் செய்தால், தங்கள் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிப்பார்கள் என்ற நம்பிக்கை அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. எங்கள் கிராம மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் இல்லையெனில் ₹51 அபராதம் விதிக்கப்படும். ஏதேனும் காரணங்களினால் வாக்களிக்க முடியாவிட்டால், அவர்கள் அனுமதி பெற வேண்டும்" என்றார்.
வைஃபை மூலம் இணைய இணைப்பு, சிசிடிவி கேமராக்கள், குடிநீர் வழங்குவதற்கான RO பிளாண்ட் உள்ளிட்ட கிராம மக்களின் வாழ்க்கையை வசதியாக மாற்றும் பல திட்டங்கள் இங்கே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமத்தில் சுமார் 995 வாக்காளர்கள் இருப்பதாகவும், இங்குள்ள மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிப்பதாகவும் கிராம நிர்வாக தலைவர் தெரிவித்திருக்கிறார்.