இந்தியாவின் யூடியூப் கிராமம்.. தொழிலே வீடியோ மேக்கிங் தானாம்.. இப்படியும் ஒரு ஊரா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பெரும்பாலான மக்கள் யூடியூப்பில் வீடியோ வெளியிடுவதையே தொழிலாக செய்துவருகின்றனர்.
யூடியூப்
இணையத்தின் வளர்ச்சி மனித குலத்திற்கு பல நன்மைகளை கொடுத்திருக்கிறது. தகவல் தொடர்பு துறை இன்றைய நவீன உலகில் மிகப்பெரும் உயரத்தை அடைந்திருக்கின்றன. உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் அடுத்த வினாடியே தெரிந்துகொள்ள முடிவதற்கு நமக்கு இணையம் உதவுகிறது. இதன் நீட்சியாக சமூக வலைத்தளங்களின் வரவு அமைந்தது. அதேபோல யூடியூப் பல திறமையான நபர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து வருகிறது. திறமையும், நம்பிக்கையும் இருக்கும் பலரும் யூடியூப் மூலமாக பெரிய உச்சங்களை அடைவதை நாம் தினந்தோறும் பார்த்துவருகிறோம்.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் ஏகப்பட்ட கன்டென்ட் கிரியேட்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். முழு நேர வேலையாக யூடியூபில் வீடியோ உருவாக்குவதையே செய்து வருகின்றனர் இந்த கிராமத்தை சேர்ந்த பலர்.
கிராமம்
சத்திஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது துளசி எனும் கிராமம். சமீப காலங்களில் இந்த பகுதியில் நிறைய படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அத்தனையும் யூடியூப் வீடியோக்களுக்காக நடைபெறுபவை. இந்த கிராமத்தை சேர்ந்த ஞானேந்திர சுக்லா மற்றும் ஜெய் வர்மா ஆகிய இரு நண்பர்கள் முதன்முதலில் யூடியூப் வீடியோக்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் மீதுள்ள பற்றால் சுக்லா தனது வங்கி வேலையை துறந்திருக்கிறார். அதேபோல, ஆசிரியராக பணிபுரிந்து வந்த வர்மா தற்போது முழுநேர கன்டென்ட் கிரியேட்டராக இருக்கிறார்.
வீடியோக்கள்
இதுபற்றி பேசிய சுக்லா "நான் முன்பு வங்கி ஒன்றில் நெட்வொர்க் இன்ஜினியராக பணிபுரிந்தேன். எனது அலுவலகத்தில் அதிவேக இணையம் இருந்தது. அங்கு நான் யூடியூப் வீடியோக்களை பார்ப்பது வழக்கம். நான் சினிமாக்களை விரும்பி பார்த்துவந்தேன். 2011-12 இல், யூடியூப்பின் புதிய பதிப்பு தொடங்கப்பட்டது. அப்போது யூடியூப்பில் மிகக் குறைவான சேனல்களே இருந்தன. எனது வேலையில் நான் திருப்தி அடையவில்லை. அதனால் வேலையை விட்டுவிட்டு யூடியூப் சேனலை ஆரம்பித்தேன். இதுவரை, நாங்கள் சுமார் 250 வீடியோக்களை உருவாக்கியுள்ளோம், மேலும் 1.15 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளோம்" என்றார்.
துவக்கத்தில் பல்வேறு தடைகளை சந்தித்ததாகவும் அதன்பின்னர் தங்களது வெற்றியை பார்த்துவிட்டு, கிராமத்தை சேர்ந்த பலர் வீடியோக்களை உருவாக்க துவங்கியதாகவும் சுக்லா தெரிவித்திருக்கிறார். இந்த சிறிய கிராமத்தில் 40 யூடியூப் சேனல்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பலர் முழுநேர வேலையாக வீடியோக்களை உருவாக்கி வருவதாக சுக்லா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய வர்மா,"பொதுவாக கிராமத்தில் உள்ள பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. ஆனால், யூடியூப் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறது. எங்களது கிராமத்தில் சுமார் 3000 பேர் இருக்கின்றனர். அவர்களில் 40 சதவீத மக்கள் யூடியூபை பயன்படுத்துகின்றனர்" என்றார்.