"இழவுக்கு போனவன தடுத்து நிறுத்தி சவக்குழி வெட்ட சொல்றாங்க!".. ஊராட்சி மன்றத் தலைவருக்கே இந்த கதியா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் 700 வாக்காளர்களை கொண்ட ஊராட்சி அரியாக்குஞ்ஞூர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த இருளர்கள் அதிகமாக வசித்து வரும் இந்த கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சின்னகல்தாம்பாடியின் இருளர் பிரிவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனாலும் மின் இணைப்பு கூட இல்லாத வீட்டில் தான் தற்போதும் இவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது

அதுமட்டுமன்றி விறகு வெட்டி அதை விற்று மட்டுமே குடும்பத்தை நடத்தி வரும் முருகேசன் சொந்தமாக மிதிவண்டி கூட இல்லாமல் ஊராட்சி பணிகளுக்காக நடந்துதான் சென்று வருவதாகவும் கூறப்படும் நிலையில் இவர் வசிக்கும் பகுதியில் ஒரு துக்க நிகழ்வுக்கான இறுதி சடங்கிற்கு மாலையுடன் நேற்று சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சிலர் மாலையை பிடுங்கி எறிந்துவிட்டு சவக்குழி தோன்றும்படி வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, “ஊராட்சிமன்றத் தலைவரான என்னை கொத்தடிமை போல் நடத்தி சிலர் ஆதிக்கம் செய்கிறார்கள். சாவுக்கு போன என்னைத் தடுத்து நிறுத்தி குழி வெட்டுவதற்கான வேலைக்கு தான் நீ லாயக்கு, போய் குழியை வெட்டு என்று சொல்கிறார்கள்” என்று முருகேசன் பேசியது சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சியில் வெளியாகி அதிர்வினை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் பிரபல எவிடன்ஸ் அமைப்பை சேர்ந்த எவிடன்ஸ் கதிரின் முனைப்பால் முருகேசன் பற்றியும், முருகேசனின் ஊராட்சியைப் பற்றியும் மேலும் சில அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின. அதன்படி பெயருக்குத்தான் முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர் என்றும் ஆனால் மற்றதை எல்லாம் முருகேசனை ஆதிக்கம் செய்யும் சிலர்தான் செய்கிறார்கள் என்றும் கையெழுத்து மட்டும்தான் தான் போடுவதாகவும் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய எவிடன்ஸ் கதிர் ஊராட்சி மன்ற தலைவர் பணியை முருகேசனை செய்ய விடாமல், அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் பணிகளில் குறுக்கீடு செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் இந்த ஊராட்சியின் அனைத்து அதிகாரங்களையும் ஊராட்சி மன்ற தலைவரான முருகேசனிடம் ஒப்படைத்து, மாதம் ரூபாய் 10,000 சம்பளம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கதிரின் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
