ஊரடங்கால் தவித்த 'ரஷிய' தம்பதி... 'திருவண்ணாமலை' மீது 'தியானம்'... கண்டுபிடித்த டிரோன் கேமரா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 20, 2020 10:47 AM

இந்தியாவின் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததை கருத்தில் கொண்டு ஊரடங்கை மே மாதம் மூன்றாம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Russian couple get stuck in Tiruvannamalai and police found

இதன் புதிய நடவடிக்கையாக மக்கள் நடமாடுவதை கண்காணிக்க டிரோன் கேமராக்களை பல இடங்களில் பறக்க விட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை தீபமலை மீது டிரோன் கேமரா பறந்த போது ரமணர் மலை அருகே இரண்டு வெளிநாட்டினர் நடந்து செல்வது தெரிந்தது. உடனடியாக காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று இருவரையும் மலையின் கீழ் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் ரஷ்ய நாட்டின் மாஸ்கோ மாகாணத்தை சேர்ந்த தம்பதி என்பதும், ஆறு மாத விசாவில் ஆன்மீக பயணமாக இந்தியா வந்ததும் தெரிய வந்தது. பல மாநிலங்களில் ஆன்மீக பயணங்களை முடித்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக திருவண்ணாமலை வந்துள்ளனர். ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் வந்ததால் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும், ஒரு வாரத்திற்கு முன்னதாக கையிலிருந்த பணமும் காலியாகி விட, விரக்தியில் தம்பதி ரமணர் குகை அருகே சென்று பசியைக் கட்டுப்படுத்த தியானத்தில் ஈடுபட்ட போது டிரோன் கேமராவில் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து காவல் துறை சார்பில் அவர்களுக்கு தங்க இடமும், உணவு பொருட்களும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பது வரை அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என திருவண்ணாமலை எஸ்.பி கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக சில வாரங்களுக்கு முன்னர் இதே போன்று திருவண்ணாமலை குகையில் ஒளிந்திருந்த சீன இளைஞர் ஒருவரை போலீசார் மீட்டு  கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.