'அமெரிக்காவை' இருளிலிருந்து 'இவர்' காப்பாற்றுவார்... முன்னாள் 'அதிபர்' பராக் ஒபாமா 'ஆதரவு'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அதிபராக வேண்டுமென முன்னாள் அதிபர் ஒபாமா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
![US Corona Obama Endorses Joe Biden For President To Heal America US Corona Obama Endorses Joe Biden For President To Heal America](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/us-corona-obama-endorses-joe-biden-for-president-to-heal-america.jpg)
நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், தன்னுடைய ஆட்சியில் துணை அதிபராக இருந்தவருமான 77 வயது ஜோ பிடன் அதிபராக வேண்டுமென ஒபாமா தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனாவால் அமெரிக்கா மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்து நிலையில், அங்கு இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் பொருளாதார நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அவர்மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் அதிபராக ஆதரவு தெரிவித்து ஒபாமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள ஒபாமா, "பிடனை என்னுடைய துணை அதிபராக தேர்ந்தெடுத்தது நான் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்றாகும். என்னுடைய நண்பர் பிடனுக்கு அதிபர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. அறிவு, அனுபவம், நேர்மை, பணிவு ஆகியவற்றால் வழிநடத்தப்படும் தலைமை மாநிலங்களில் மட்டும் இருந்தால் போதாது. வெள்ளை மாளிகையிலும் அதுபோன்ற தலைமை இருக்க வேண்டும்.
அதனால் அமெரிக்காவின் அதிபராக ஜோ பிடனை ஆதரிப்பதில் பெருமையடைகிறேன். நாட்டை ஆளும் குடியரசு கட்சியினருக்கு அதிகாரத்தின் மீது மட்டுமே ஆர்வம் இருக்கிறது. சராசரி அமெரிக்கர்களுக்கு உதவுவதை விட பணக்காரர்களுக்கு உதவுவதிலேயே அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சமயத்தில் நாட்டை சரியாக வழிநடத்தி இருளில் இருந்து மீட்கும் தகுதி பிடனுக்கே உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)