நண்பனை கொன்னுட்டு.. தப்பிக்க திருட்டு கேசில் மாட்டி.. போலீஸ் கொலையாளிய கண்டுபிடிச்ச நேரத்துல திடீர் ட்விஸ்ட்.. ஸப்பா.. க்ரைம் த்ரில்லர் படம் மாரி இருக்கு..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலி: கஞ்சா போதையில் நண்பனை கொலை செய்த நபர் போலீசிடம் சிக்காமல் இருக்க பைக் திருடன் போல் செயல்பட்டு பொதுமக்களிடம் அடிவாங்கிய மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் கரையோரம் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் பாளையங்கோட்டை மற்றும் நெல்லை சந்திப்பு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் நபர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு அடிக்கடி இதுபோன்று உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாக நடைபெறுகிறது.
போலீஸ் விசாரணை
தற்போது சடலமாக மீட்கப்பட்ட நபரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மீட்கப்பட்ட நபர் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் முகமது உசேன் என்றும் திருமணமானவர் என்பதும் தெரியவந்தது. இவர் சாம்பிராணி புகை போடும் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, வேலை ரீதியாக யாரிடமும் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது குடும்ப சூழல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸிடம் சிக்கிய செல்போன்
அவரது உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதால் உடற்கூறாய்வுக்குப் பின் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இறந்த முகமது உசேன் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் முருகன் என்பவரிடம் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
விறுவிறு கேஸ்.. திடீர் ட்விஸ்ட்
முருகன் காவல்துறையிடம் கூறியதாவது, 'நான் முகமது உசேன், சுலைமான் மூன்று பேரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் நாங்கள் மூன்று பேர்தான் செல்வோம். எங்களுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருக்கிறது. சம்பவம் நடந்த அன்று நாங்கள் மூன்று பேரும் சாப்பிட்டு விட்டு மேலப்பாளையம் தாமிரபரணி ஆற்று கரையோரம் இருந்து கஞ்சா அடித்துக் கொண்டிருந்தோம். அப்போது சுலைமானுக்கும் முகமது உசேன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக சுலைமான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகமது உசேன் கழுத்தை அறுத்து மிதித்து ஆற்றில் தள்ளிவிட்டார். பின்னர் அங்கிருந்து நான் தப்பி சென்று விடுவோம் என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார். நானும் அங்கிருந்து தப்பி சென்று விட்டேன் என்று காவல்துறையிடம் அவர் தெரிவித்தார்.
பைக் திருட்டு நாடகம்
இந்நிலையில், சுலைமான் எப்படி பைக் திருட்டு வழக்கில் ஈடுபட்டார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், முகமது உசேன் இறந்துவிட்டார் என்பதை அறிந்த சுலைமான் மறுநாள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு இருசக்கர வாகனத்தை திருடுவது போல் பாசாங்கு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவனை திருடன் என்று நினைத்து அடித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவருக்கு காயம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினர் உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு சேர்ந்த சிறிது நேரத்திலேயே சுலைமான் இறந்துவிடுகிறார்.
கொலையாளி யார்?
சுலைமான் தான் குற்றவாளி என்று கண்டுபிடித்த காவல்துறையினர் அவரைப் பிடிப்பதற்காக தேடியபோது அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பொதுமக்கள் தாக்குதலில் லாக்கப் டெத் ஆனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முருகனை மட்டும் கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கஞ்சா போதையில் நண்பனை கொலை செய்து அதிலிருந்து தப்பிக்க திருட்டு நாடகத்தில் ஈடுபட்ட சுலைமான் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.