
திருநெல்வேலிக்கே அல்வா காட்டிய கூகுள் மேப்.. நம்பி போன லாரி .. கோயிலுக்குள் சிக்கி பரிதாபம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கோயிலுக்குள் லாரி சிக்கி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் சேரன்மகாதேவி சாலையில் நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான காட்சி மண்டபம் அமைந்துள்ளது. இப்பகுதி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்களில் செல்லாதவாறு இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக கனரக லாரி ஒன்று நெல்லைத் டவுனுக்குள் வந்துள்ளது. லாரி டிரைவர் கூகுள் மேப் உதவியுடன் லாரியை ஓட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அம்பாசமுத்திரம் செல்வதற்கு நெல்லையப்பர் கோவில் சாலை கீழரத வீதி சந்திப் பிள்ளையார் கோவில் வழியாக சேரன்மகாதேவி செல்வதற்கு கூகுள் மேப்பில் வழி காட்டியுள்ளது. சந்திப் பிள்ளையார் கோவிலில் இருந்து சேரன்மகாதேவி சாலை செல்லும் வழி ஒருவழிப்பாதை என்பது மட்டுமல்லாமல், அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கூகுள் மேப் காட்டிய வழி தவறானது என்பதை அறிந்திராத லாரி டிரைவர், அந்த வழியாக லாரியை இயக்கியுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் இந்த வழியாக லாரியை செல்ல முடியாது என டிரைவரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் லாரியை இயக்கியதாக சொல்லப்படுகிறது.
ஒரு கட்டத்தில் லாரி உள்ளே சென்று வெளியே செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் சுமார் 2 மணி நேரம் போராடி லாரியை மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் லாரி டிரைவருக்கு அபராதம் விதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்
